ஆவின் நிர்வாகத்திற்கு ரூ.1,400 கோடி இழப்பு

ஆவின் நிர்வாகத்திற்கு ரூ.1,400 கோடி இழப்பு – அரசின் நிதி உதவி தேவை
ஈரோடு: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தின் கொங்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்த இந்த கூட்டத்தில் பால் உற்பத்தியாளர்களின் நலன் குறித்த முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.
கூட்டத்திற்குப் பின் நிருபர்களிடம் பேசிய ராஜேந்திரன், “ஆவின் நிர்வாகம் பால் கொள்முதல் அளவை அதிகரிக்காமல் காலம் தாழ்த்துகிறது. இதனால், பால் உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனங்களுக்கு பாலை வழங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி 3 கோடி லிட்டர் பால் உற்பத்தியாகும் நிலையில், ஆவின் அதன் அளவை வெறும் 30 லட்சம் லிட்டராக மட்டுமே நிர்ணயித்துள்ளது. இதை உயர்த்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்றார்.
மேலும், “நாட்டில் பால் விலை உயர்ந்த நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.3 குறைப்பதாக முதல்வர் அறிவித்தார். இதனால், ஆவின் நிர்வாகத்திற்கு ரூ.1,400 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை அரசு நிதியிலிருந்து வழங்கும் வகையில் முதல்வர் உடனடியாக உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் பொருளாளர் ராமசாமி, துணை தலைவர் பத்மநாபன், பழனியப்பன், ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu