ஈரோட்டில் அதிகரிக்கும் போதைப்பொருள், சட்ட விரோத செயல்கள்: காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?
போதைப்பொருள் - காட்சி படம்
ஈரோடு மாநகரின் முக்கிய பகுதிகளான சூரம்பட்டி மற்றும் சூரம்பட்டி வலசு பகுதிகளில் அதிக குடியிருப்புகள், அதிக மக்கள் நடமாட்டம் என தினமும் பகலில் பரபரப்பாக காணப்படும்
இப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே போதைப் பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை சர்வ சாதாரணமாக நடை பெற்று வருகிறது.
இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், சூரம்பட்டி மற்றும் சூரம்பட்டி வலசு பகுதியில் கடந்த சில தினங்களாகவே சட்ட விரோத செயல்கள் அதிகரித்து வருகின்றன. புகையிலைப் பொருட்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை வெளிப்படையாகவே நடந்து வருகிறது. சட்டவிரோத செயல்களை தடுக்க இரவு நேரங்களில் அவ்வப்போது காவல்துறையினர் ரோந்து வருவது வழக்கம். ஆனால் தற்போது ரோந்து வருவதாகத் தெரியவில்லை.
குறிப்பாக சூரம்பட்டி திருவிக வீதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையால் பொதுமக்கள் பல இன்னல்களை வருகின்றனர். சந்தித்து இரவு நேரங்களில் ரோட்டில் அமர்ந்து மது அருந்தி தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதன்காரணமாக பெண்கள் நடமாடவே அச்சப்படுகின்றனர்.
மேலும் டாஸ்மாக் கடை அருகே உள்ள அரசு கட்டிடத்தை ஆக்கிரமித்து இரவு நேரங்களில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுகின்றன. அருகிலேயே காவல்நிலையம் இருந்தும் இது போன்ற சட்டவிரோத செயல்கள் நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எனவே சூரம்பட்டி காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு போதைப் பொருள் விற்பனை மற்றும் சட்ட விரோத செயல்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறினர்.
புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்கும் வகையில் முதலமைச்சர் உத்தரவின் பேரில் தமிழக காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், சூரம்பட்டி பகுதியில் போதைப் பொருள் மற்றும் சட்ட விரோத செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu