வி.இ.டி. கலை கல்லுாரியில் கலாசார திருவிழா

வி.இ.டி., கலை கல்லூரியில் மாபெரும் கலாசார திருவிழா யுகா-25 வெற்றிகரமாக நிறைவு
ஈரோடு வி.இ.டி., கலை மற்றும் அறிவியல் இருபாலர் கல்லூரியில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான கலாசார திருவிழா யுகா-25 அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. வேளாளர் கல்வி அறக்கட்டளை தலைவர் திரு. ஜெயக்குமார் அவர்கள் விழாவுக்கு தலைமை தாங்கினார். வேளாளர் கல்வி நிறுவன செயலாளர் திரு. சந்திரசேகர் அவர்கள் ஆரம்ப விழாவில் மாணவர்களை உற்சாகப்படுத்தி தொடக்கவுரையாற்றினார். மாணவர்களின் கலை மற்றும் கலாசார திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த இந்த விழாவில் வி.இ.டி., கலை கல்லூரி நிர்வாகி திரு. பாலசுப்ரமணியன், வேளாளர் கல்வி அறக்கட்டளை நிர்வாகி திரு. யுவராஜா, கல்லூரி முதல்வர் டாக்டர் நல்லசாமி, மற்றும் கல்லூரி நிர்வாக அலுவலர் திரு. லோகேஷ்குமார் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தி மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பிரபல திரைப்பட நடிகை திருமதி மாளவிகா மோகனன் கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தார். தொழில்நுட்பம், கலை, இலக்கியம், இசை, நடனம் மற்றும் நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் தமிழகம் முழுவதிலும் இருந்து மருத்துவம், பொறியியல் மற்றும் கலை அறிவியல் பிரிவுகளைச் சேர்ந்த 62 கல்லூரிகளில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். முப்பதுக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான கலை, கலாசார போட்டிகளில் அனைத்து கல்லூரிகளையும் பின்னுக்குத் தள்ளி கோவை அரசூர் கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி அதிக புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும், கோப்பையையும் வென்றது. அடுத்தடுத்த இடங்களில் கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் சேலம் விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இடம்பெற்றன. விழாவின் நிறைவு நாளன்று நடைபெற்ற கலாசார இரவில் பிரபல இசை குழுக்கள் இசைநிகழ்ச்சி நடத்தி அனைவரையும் மகிழ்வித்தனர். மூன்று நாட்கள் கொண்டாட்டங்களுடன் நடைபெற்ற இந்த கலாசார திருவிழா நிகழ்ச்சி மாணவர்களிடையே ஒற்றுமை உணர்வை வளர்த்ததுடன், அவர்களது படைப்பாற்றல் திறமைகளையும் வெளிக்கொண்டு வந்ததாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். வரும் ஆண்டுகளிலும் இதே போன்ற நிகழ்வுகளை மேலும் விரிவாக நடத்த திட்டமிட்டுள்ளதாக வி.இ.டி., கலை கல்லூரியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu