ரூ.17 கோடிக்கு நாட்டு சர்க்கரை கொள்முதல்

ரூ.17 கோடிக்கு நாட்டு சர்க்கரை கொள்முதல்
X
கவுந்தப்பாடி ஏலத்தில் நாட்டு சர்க்கரை விவசாயிகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது

ரூ.17 கோடிக்கு நாட்டு சர்க்கரை – பழனி தேவஸ்தானம் கொள்முதல்

கோபி: ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வாரந்தோறும் சனிக்கிழமை நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்துக்கான ஏலம் நடைபெறுகிறது. கோபி மற்றும் பவானி தாலுகாவைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் தங்களது உற்பத்தி செய்யப்பட்ட நாட்டு சர்க்கரையை இந்த ஏலத்தில் விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 2020 அக்டோபர் 15 முதல், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பழனி தேவஸ்தான நிர்வாகம், முதல் தரம் (திடம்) மற்றும் இரண்டாம் தரம் (மீடியம்) என பிரித்து, நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்தை கொள்முதல் செய்து வருகிறது.

2024 ஏப்ரல் 1 முதல் 2025 மார்ச் 31 வரை கடந்த ஒரு ஆண்டில், 1,540 விவசாயிகளிடம் இருந்து 17.01 கோடி ரூபாய் மதிப்பில், 63,952 மூட்டைகளில் (60 கிலோ) மொத்தமாக 38,371 குவிண்டால் நாட்டு சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது. இதேபோல், உருண்டை வெல்லம் கொள்முதல் செய்ய 43 விவசாயிகளிடம் இருந்து, 26.23 லட்சம் ரூபாய் மதிப்பில், 1,635 சிப்பத்தில் (30 கிலோ) 490 குவிண்டால் வாங்கப்பட்டது.

மொத்தமாக, கடந்த ஓராண்டில் மட்டும் 17.27 கோடி ரூபாய் மதிப்பில் 38,861 குவிண்டால் நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story