ஈரோட்டில் அம்பேத்கரின் முழு உருவ சிலையை திறந்து வைத்த முதல்வர்
அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அமைச்சர் முத்துசாமி.
ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் தந்தை பெரியார், அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் சிலை நிறுவப்பட்டு உள்ளது. இருப்பினும் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்காக குரல் கொடுத்த சட்ட மேதை அம்பேத்கருக்கு ஈரோட்டில் சிலை அமைக்கப்படவில்லை.
அதன்பேரில் ஈரோட்டில் புரட்சியாளர் அம்பேத்கருக்கு சிலை அமைக்க வலியுறுத்தி, கடந்த ஆட்சிகளில் பல அரசியல் கட்சிகள், தலித் அமைப்பினர் தொடர்ச்சியான மனுக்கள், கடிதங்கள், போராட்டம், மறியல், என பல்வேறு முயற்சிகளின் வாயிலாக கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர்.
அதனடிப்படையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் அம்பேத்கருக்கு சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தனர். அதன்படி குடியரசு தின நாளான இன்று 11 லட்ச ரூபாய் மதிப்பில் 7 1/4 அடி உயரமும் 250 கிலோ எடையுமுள்ள வெண்கலத்தால் ஆன சிலை ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் அதிகாலை 5 மணியளவில் நிறுவப்பட்டது. அச்சிலையை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
ஈரோட்டில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலைக்கு வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவக்குமார் மற்றும் பல அரசியல் அமைப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படா வண்ணம் நேற்று இரவு 1 மணியளவில் சிலை நிறுவும் பணியானது பன்னீர் செல்வம் பூங்காவில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu