ஆசனூர் அருகே சாலையோரம் முகாமிட்டு இருக்கும் காட்டு யானைகள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை, தமிழக-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்து வழித்தடமாக அமைந்துள்ளது. காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரங்களில் சுற்றி திரிவதோடு சாலையோர வனப்பகுதியில் முகாமிட்டபடி தீவனம் உட்கொள்கின்றன.
இந்நிலையில் ஆசனூர் அருகே காட்டுயானைகள் சாலையோரம் முகாமிட்டு தீவனம் உட்கொண்டிருந்தன. அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர் யானைகளை கண்டதும் வாகனத்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கி காட்டு யானைகளின் அருகே சென்று ஆபத்தை உணராமல் செல்போன்களில் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து கொண்டிருந்தனர்.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு வந்த வனத்துறையினர் செல்பி எடுத்துக் கொண்டிருந்த வாகன ஓட்டிகளை எச்சரித்தனர். மேலும் காட்டுயானைகள் திடீரென மனிதர்களை தாக்கும் வாய்ப்பு உள்ளதால் இவ்வாறு செயல்படுவது ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் எடுத்துரைத்தனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறுவது என்பது வழக்கமான ஒன்று. அவ்வாறு வெளியேறும் வனவிலங்குகளை சாலையோரம் கண்டதும் அருகே சென்று செல்பி மற்றும் புகைப்படம் எடுக்கக்கூடாது. இதுகுறித்து ஆங்காங்கே விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைத்தும் வாகன ஓட்டிகள் வனவிலங்குகளின் அருகே சென்று புகைப்படம் எடுப்பது வருவது பெரும் ஆபத்தை உண்டாக்கும். எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu