சர்கார் பட பாணியில் ஓட்டு போட்ட இளைஞர்

சர்கார் பட பாணியில் ஓட்டு போட்ட இளைஞர்
X

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சர்கார் பட பாணியில் 49 பி சட்ட பிரிவின் படி இளைஞர் ஓட்டு போட்டார் .

சத்தியமங்கலம் அருகே உள்ள கெஞ்சனூர் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (32).இவர் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணி செய்து வருகிறார். ஒவ்வொரு தேர்தலின் போதும் தவறாமல் ஓட்டு போட்டு வருகிறார். இந்நிலையில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கெஞ்சனூர் அரசு பள்ளியில் பாகம் எண் 128, வரிசை எண் 285-ல் சரவணன் வாக்களிக்க சென்று தனது அடையாள அட்டையை காண்பித்துள்ளார். அதற்கு அங்குள்ள தேர்தல் பணியாளர்கள் உங்களது ஓட்டு ஏற்கனவே போடப்பட்டு விட்டது என கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன் விசாரித்ததில் வேறு ஒருவர் கள்ள ஓட்டு போட்டு விட்டார் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சரவணன் எனது ஓட்டினை வேறு ஒருவர் எப்படி போட முடியும் என கேட்டு வாக்குசாவடி மைய ஊழியர்களோடு வாக்குவாதம் செய்துள்ளார். இது குறித்து சரவணன் கூறியதாவது - ஒவ்வொரு தேர்தலின் போதும் தவறாமல் ஓட்டு போட்டு வருகிறேன். அதேபோல் இந்த தேர்தலிலும் ஓட்டு போட வந்த போது எனது ஓட்டினை மற்றொருவர் போட்டுள்ளது அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இதுகுறித்து கேட்டால் அதிகாரிகள் சர்வ சாதாரணமாக போட்டோவை எல்லாம் சரிபார்க்க மாட்டோம் என மிகவும் மெத்தனமாக நடந்து கொண்டனர்.

பின்பு நான் கலெக்டர் அலுவலகத்தில் பணி செய்கிறேன் என விபரத்தை கூறி அடையாள அட்டையை காண்பித்த பிறகு என்னை சமாதானம் செய்து தேர்தல் சட்ட பிரிவு 49 பி - ன் படி படிவம் 17 பி யை நிரப்பி டெண்டர் ஓட்டு போட அனுமதித்தனர். அரசு ஊழியரான எனக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்கள் இந்த இடத்தில் எப்படி சமாளித்து இருப்பார்கள்? என கூறினார்.சர்கார் பட பாணியில் 49 பி சட்ட பிரிவின் படி ஓட்டு போட்ட இளைஞரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!