சத்தியமங்கலத்திற்கு மட்டும் ஊரடங்கு தளர்வா?வீதிகளில் மக்கள் கூட்டம்!
அட ஊரடங்கு தளர்வு அறிவிச்சிட்டாங்களோ? சத்தியமங்கலம் பகுதியில் வாகனங்களில் மக்கள் நடமாட்டம் சகஜமாக உள்ளது.
சமூக இடைவெளி கிலோ எவ்வளவு? சத்தியமங்கலத்தில், சமூக இடைவெளியை மறந்து காய்கறி வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த மாதம் 24ம் தேதி முதல் தளர்வு இல்லாத, முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்ததால், ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
இதன் பயனாக சென்னை உள்பட தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தினசரி பாதிப்பு குறைய தொடங்கியது. ஆனால் மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு, சேலம் திருச்சி போன்ற மாவட்டங்களில் தினசரி பாதிப்பு அதிகரித்து வந்தது. இதையடுத்து ஜூன் 7-ஆம் தேதி முதல் சில தளர்வுகள் உடன் ஊரடங்கு வரும் 14ஆம் தேதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தனியாக செயல்படும் காய்கறி, மளிகை, பலசரக்கு, இறைச்சி, மீன் கடைகளுக்கு நேரக்கட்டுபாட்டுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள வடக்குபேட்டை, கடைவீதி, ரங்கசமுத்திரம், வரதபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் ஆகியவற்றில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.
சத்தியமங்கலத்தில் முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு வீதிகளில் மக்கள் கூட்டம் உள்ளது; பல இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதில்லை. குறிப்பாக பவானி ஆற்றுபாலம், பேருந்து நிலையம், எஸ்ஆர்டி கார்னர் போன்ற சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.
இவ்வாறு பொதுமக்கள் நடந்து கொண்டால், மீண்டும் நோய் தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, விதிமீறுவோரை கண்காணித்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu