மக்களை தேடி மருத்துவம் திட்டம் : அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைப்பு
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி.
ஈரோடு மாவட்டம், தாளவாடி அடுத்துள்ள தொட்டகாஜனூர் துணை சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடக்க விழா இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி,
திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பே பல்வேறு திட்டங்களை அறிவித்தார். தற்போது முதலமைச்சரின் தொலைநோக்கு திட்டங்கள் என்ற தலைப்பில் பல்வேறு திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர், சுகாதாரத்துறையைச் சேர்ந்த அலுவலர்களும், தாளவாடியில் இருக்கின்ற ஆரம்ப சுகாதார மையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்துதல் என்ற திட்டத்தை அரசிற்கு அனுப்பியுள்ளார்கள். இங்கு ஏற்கனவே 5 மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இத்திட்டம் நிறைவேற்றப்படும் போது மேலும் கூடுதல் வசதிகள் மேற்கொள்ளப்படும். இங்கு உள்ள மலைவாழ் மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக கீழே இறங்கி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதனை தவிர்த்து, ஆரம்ப சுகாதார மையத்தை முழுமையான பயன்பாட்டிற்கு மருத்துவமனையாக கொண்டு வரும் பட்சத்தில் பல்வேறு சிரமங்கள் தவிர்க்கப்படும். எனவே இத்திட்டத்தை நிறைவேற்றி வழங்க முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, விரைவில் நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மக்களை தேடி மருத்துவம்" முதற்கட்டமாக தாளவாடி வட்டாரத்திலும் அதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தாளவாடி வட்டாரத்தில் 1409 பயனாளிகள் பயன்பெறவுள்ளதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாறுதல் ஆணைகளையும், 4 பயனாளிகளுக்கு தலா ரூ.12,000 மதிப்பில் முதியோர் மற்றும் விதவை உதவித்தொகைகளையும் மற்றும் 60 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் செல்வராஜ், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பழனிதேவி, உதவி இயக்குநர் ஊராட்சிகள உமாசங்கர், சுகாதார பணிகள் துணை இயக்குநர் சவுண்டம்மாள், தாளவாடி வட்டாட்சியர் உமாமகேஷ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu