கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு : விவசாயிகள் மகிழ்ச்சி

கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு : விவசாயிகள் மகிழ்ச்சி
X
கீழ்பவானி கால்வாய் கரை உடைப்பு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் முதற்கட்டமாக மீண்டும் 200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சத்து நாற்பத்தி ஏழாயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வருடாவருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம்.

அதேபோல், இந்த வருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி கீழ்பவானி வாய்க்காலில் நன்செய் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. பின்னர் ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட கரை உடைப்பின் காரணமாக அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறந்து விடப்பட்ட தண்ணீர் ஆகஸ்ட் 19ஆம் தேதி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் மீண்டும் பாசனத்திற்காக 200 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, படிப்படியாக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம்

இன்று காலை 6 மணி நிலவரப்படி, பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 30.31 டிஎம்சி ஆகவும், அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 813 கன அடியாகவும் உள்ளது.

தற்போது அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு 488 கனஅடி நீர், கீழ்பவானி வாய்க்காலில் 200 கனஅடி நீர் பவானி ஆற்றில் 112 கன அடி நீர் என மொத்தம் 800 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. மீண்டும் கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil