அடங்கமாட்டுகிறாங்களே... சத்தியமங்கலத்தில் விதிமீறி செயல்படும் கடைகள்: அதிகாரிகள் தூக்கம்
தமிழகம் முழுவதும் கொரோனா பெரும் தொற்று பரவல் காரணமாக, தமிழக அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. 27 மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்ததன் காரணமாக, கடந்த திங்கட்கிழமை முதல் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது. இங்கு, டாஸ்மார்க் கடைகள், சலூன் கடைகள், இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடைகள் இயங்கலாம் என அரசு அறிவித்திருந்தது.
தொற்று குறையாத கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, இந்த 11 மாவட்டங்களில் வழக்கம்போல் காய்கறி கடைகள், மளிகை கடைகள் செயல்படும் எனவும் புதிய தளர்வுகளுடன் இருசக்கர வாகனம் மற்றும் மிதிவண்டிகள் விற்பனை செய்யும் கடைகள், அதனை பழுது பார்க்கும் கடைகள் மட்டும் செயல்படும் எனவும் தமிழக அரசு அனுமதி தந்துள்ளது.
பொதுமக்களின் தேவைக்காக அத்தியாவசிய பொருட்களான மளிகைக் கடைகள் மற்றும் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், சத்தியமங்கலம் பகுதியில் தொற்று பரவல் குறையாததால், இங்குள்ள வணிகர் சங்கம், மதியம் ஒரு மணி வரை மட்டுமே மளிகை கடைகள் மற்றும் காய்கறிகள் செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதையேற்று, அனைத்து மளிகை கடைகள், காய்கறி கடைகள் அனைத்தும், மதியம் ஒரு மணிக்கு மூடப்பட்டு வருகின்றது. ஆனால், அரசின் விதிமுறைகளை மீறி, வணிகர் சங்க கட்டுப்பாடுகளை அலட்சியப்படுத்தி, ஒருசில எலக்ட்ரிகல் கடைகள், ஹார்டுவேர்ஸ், ஃபேன்சி ஸ்டோர்கள், இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், பிளைவுட் விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்டவை, பாதி கதவுகள் திறந்து வைத்து விற்பனை செய்து வருகின்றன. இதனால் மேலும் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுபோல் விதிகளை மீறி கடைகளைத் திறந்து விற்பனை செய்து வரும் கடை உரிமையாளர்கள் மீது காவல்துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் கடும் நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு அபராதம் விதித்து, சீல் வைத்தால் மட்டுமே சத்தியமங்கலம் பகுதியில் கொரோனா பரவுவதை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu