சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி
X
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ 1890 ரூபாயாக உயர்ந்ததால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், கொத்தமங்கலம், தாண்டாம்பாளையம், பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகை பூ சாகுபடி செய்து வருகின்றனர்.

இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பூக்கள் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் கோவை திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சில குறிப்பிட்ட காலங்களில் துபாய் மற்றும் அமெரிக்காவிற்கும் ஏற்றுமதி ஆகின்றது.

இந்நிலையில் இன்று மொகரம், வரலட்சுமி விரதம், பிரதோஷம் மற்றும் சுப முகூர்த்த தினம் என்பதால், சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. அதன்படி மல்லிகைப்பூ கிலோ 1890 ரூபாய்க்கு விற்பனையானது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு வாரம் முன்பு வரை 875 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப்பூ, இன்று அதிரடியாக இரு மடங்கு உயர்ந்து விற்பனையானதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சத்தியமங்கலம் மலர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் செயல்படும் பூ மார்க்கெட்டின் இன்றைய விலை நிலவரப்படி மல்லிகைப்பூ 1890 ரூபாய்க்கும், முல்லை 620, காக்கடா 775, ஜாதிமல்லி 800 ரூபாய்க்கும் விற்பனையானது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்