மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்துக்கு தடை : ஆபத்தான வனப்பகுதி வழியாக செல்லும் பேருந்துகள்

மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்துக்கு தடை : ஆபத்தான வனப்பகுதி வழியாக செல்லும் பேருந்துகள்
X

தமிழகம்- கர்நாடக இடையே போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட திம்பம் பிரிவில் இருந்து, காளி திம்பம் வழியே ஆபத்தான பாதையில் செல்லும் அரசு பஸ்.

மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் தமிழக - கர்நாடக எல்லையான தாளவாடிக்கு செல்லும் பேருந்துகள் தலமலை வனப்பகுதி வழியாக, ஆபத்தான சூழலில் செல்கின்றன.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து, தாளவாடி செல்லும் பேருந்துகள் வழக்கமாக ஆசனூர், புளிஞ்சூர், கும்பாரகுந்தி வழியாக செல்வது வழக்கம். இந்த வழியில் கர்நாடக மாநிலத்தின் ஒரு பகுதியான புலிஞ்சூர், கோழிப்பாளையம் ஆகிய கிராமங்களைத் தாண்டி மீண்டும் தமிழக எல்லைக்குள் உள்ள கும்பரகுந்தி வழியாக தாளவாடி சென்றடையும். இந்த வழக்கமான பாதையில் செல்லும் போது திம்பத்தில் இருந்து 30 கிலோமீட்டர் பயணித்து தாளவாடி சென்று விடலாம்.

தற்போது கொரானா தொற்று காரணமாக, மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட திம்பம் பிரிவில் இருந்து காளி திம்பம், பெஜலெட்டி, ராமர் அணை, தலமலை, தொட்டபுரம், நெய்தாளபுரம், முதியனூர், சிக்கள்ளி உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் வழியாக 43 கிலோ மீட்டர் பயணித்து, மீண்டும் தாளவாடிக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

வழக்கமான பாதையை விட இந்த பாதையில் செல்கின்ற போது 13 கிலோமீட்டர் அதிகமாக பயணிக்க வேண்டி உள்ளது. மேலும் குறுகலான பாதைகள் மற்றும் வளைவுகளும் உள்ளதால் வழக்கத்தைவிட ஒருமணி நேரம் கூடுதலாகிறது. மேலும் இந்த வழிகள் முழுவதும் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளதால் வனவிலங்குகள் எந்த நேரமும் குறுக்கீடு செய்ய வாய்ப்புள்ளதால் பயணிகள் அச்சத்துடனே பயணிக்கின்றனர். இரு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தொடங்கினால் மட்டுமே வனப்பகுதியில் பயணிக்கும் இந்த மாற்று பாதை ரத்து செய்யப்படும் என போக்குவரத்து கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!