102 அடியை எட்டிய பவானிசாகர் அணை; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

102 அடியை எட்டிய பவானிசாகர் அணை; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
X

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணை 102 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது.

பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்கி வருகிறது.

நீலகிரி மலைப்பகுதியில் கடந்த மாதம் பரவலாக மழை பெய்ததால், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 4-வது ஆண்டாக 100 அடியை எட்டியது. அதிலிருந்து பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியே இருந்து வந்தது.

தற்போது நீலகிரி மலைப்பகுதியில் மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது. அணையில் தண்ணீர் தேங்குவது குறித்து பொதுப்பணித்துறை வகுக்கப்பட்ட விதியின்படி செப்டம்பர் 30-ஆம் தேதி வரை 102 அடி வரையிலும், அக்டோபர் முதல் தேதியிலிருந்து அணையின் முழு கொள்ளளவான 105 அடி வரையும் தண்ணீர் தேக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் பவானிசாகர் அணை நீர்மட்டம் 102 அடியை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுப்பணித் துறையினர், வருவாய்த் துறையினர் ஒலிபெருக்கி தண்டோரா மூலம் பவானி கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். பவானி ஆற்றில் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இன்று காலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 829 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காளிங்கராயன் பாசனத்திற்காக 422 கன அடியும், பவானி ஆற்றுக்கு 4348 கன அடியும் என மொத்தம் 4770 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil