100 அடியை எட்டியது பவானிசாகர் அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

100 அடியை எட்டியது பவானிசாகர் அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
X

பவானிசாகர் அணை

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை, ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய மண் அணை என்ற புகழைப் பெற்றுள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 105 கன அடியாகும். அணையின் மூலம் ஈரோடு திருப்பூர் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளான வட கேரளம், நீலகிரி மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வருவாய் துறையினர் பவானிசாகர் அணையிலிருந்து எந்த நேரமும் உபரி நீர் வெளியேற்றப்படலாம் எனவும் பவானி ஆற்றங்கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் எனவும் பவானி ஆற்றில் பொதுமக்கள் துணி துவைக்கவோ குளிக்கவோ கூடாது எனவும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் தற்போது அணைக்கு நீர்வரத்து 6324 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 99 அடியாக இருந்த நிலையில், படிப்படியாக நீர்வரத்து அதிகரித்து தற்போது பவானிசாகர் அணை 100 அடியை எட்டியுள்ளது. இதன் காரணமாக 5200 கன அடி நீர், அணையில் இருந்து தற்போது உபரி நீராக பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்கால்பாசனத்திற்காக 800 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

1955 இல் கட்டப்பட்ட பவானிசாகர் அணை இதுவரை 29 முறை நிரம்பி உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பவானிசாகர் அணை இந்த ஆண்டும் நிரம்பியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த நான்கு ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு முறை பவானிசாகர் அணை 100 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!