67 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் பவானிசாகர் அணை
பவானி சாகர் அணை.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் அணை தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணையாக உள்ளது. ஆசியாவிலேயே மிக நீளமான அணையும் இதுதான். பவானி ஆறும், மாயாறும் சங்கமிக்கும் இடத்தில் சுமார் 10.50 கோடி செலவில் இந்த அணை கட்டப்பட்டது. நாடு விடுதலை அடைந்த பின்னர் 1948 ஆம் ஆண்டு துவங்கி ஏழு ஆண்டுகள் தொடர்ச்சியாக கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது.
1953 ஆம் ஆண்டு அணை கட்டுமான பணிகளை அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு சென்னை மாகாண முதல்வர் ராஜாஜி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பின்பு 1955 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் பவானிசாகர் அணையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்த அணையில் 32.8 டிஎம்சி வரை நீரை தேக்கி வைக்கலாம். இதன் உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பகுதிகளைச் சேர்ந்த ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஈரோடு மாநகராட்சி சத்தியமங்கலம், கோபிச்செட்டிபாளையம், புளியம்பட்டி. பவானி ஆகிய நகராட்சிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் பொது மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது.
இந்த அணையில் இரண்டு நீர் மின்னுற்பத்தி நிலையங்கள் உள்ளன. அதன் மூலம் 16 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அணை கட்டப்பட்டதால் அங்குள்ள சுற்றுவட்டார பகுதியில் இருந்த தரிசு நிலங்கள் அனைத்தும் நஞ்சை நிலங்களாக மாறின. லட்சக்கணக்கான விவசாயிகள் கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. சிறு சிறு கிராமங்கள் முதல் நகரங்கள் வரை குடிநீர் தேவை பூர்த்தி ஆனது.
பவானிசாகர் அணை 67 ஆண்டுகளில் 27 முறை அயை 100 அடி நீர் மட்டத்தை எட்டியுள்ளது. இதில் கடந்த ஆண்டில் மட்டும் மூன்று முறை முழு கொள்ளளவை எட்டி சாதனையும் படைத்துள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு கடந்த 15 ஆம் தேதி முதல் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2000 கனஅடி நீர் 120 நாட்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தமிழர்களின் கட்டிடக்கலையின் பெருமையை பறைசாற்றும் விதமாக முழுக்க முழுக்க இந்திய பொறியாளர்களின் முயற்சியில் உருவான இந்த பவானிசாகர் அணை 67வது ஆண்டில் அடி எடுத்து வைத்து இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu