சினிமாவை மிஞ்சிய ரியல் ஹீரோ- உயிரை பணயம் வைத்து பச்சிளம் குழந்தையை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்

சத்தியமங்கலத்தில், பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை, தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அங்கனங்கவுண்டன் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி சௌமியா. சில தினங்களுக்கு முன்பு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக , செளமியா சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

தாயும் சேயும் நலமுடன் இருந்த நிலையில், திடீரென குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தையின் இதயத்துடிப்பு மோசமடைந்துள்ளதாகவும், மேல்சிகிச்சைக்காக குழந்தையை உடனடியாக கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படியும் அறிவுறுத்தினர்.

பிறந்த மூன்று தினங்களே ஆன நிலையில் குழந்தைக்கு இதயத்துடிப்பு சரியாக இல்லை என டாக்டர்கள் கூறியதால் , பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்; அடுத்து என்ன செய்வது என்று அறியாமல் திணறினர். குழந்தையின் உயிரைக் காப்பாற்ற கண்ணீருடன் பெற்றோர் இருந்தநிலையில் சத்தியமங்கலம் ரீலீப் டிரஸ்ட் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நவீன் உதவ முன்வந்தார்.

பச்சிளம் குழந்தையை தனது ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு, சத்தியமங்கலத்தில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவை தனியார் மருத்துவமனைக்கு பறந்தார். இந்த தூரத்தை, அதிவிரைவாக ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்கி, 40 நிமிடங்களில் கோவைக்கு குழந்தையை பத்திரமாக கொண்டு சேர்த்தார்.

உரிய நேரத்தில், மேல் சிகிச்சைக்காக குழந்தை சேர்க்கப்பட்டததால் தற்போது அதன் உடல் நிலை நன்றாக உள்ளது. உயிருக்கு போராடிய குழந்தையை, தன் உயிரை பணயம் வைத்து, உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்த 'ரியல் ஹீரோ' ஆம்புலன் ஓட்டுநர் நவீனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. குழந்தையின் பெற்றோர், நெகிழ்ச்சியுடன் நவீனை பாராட்டி, நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!