பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா: 10 பேர் மட்டுமே குண்டத்தில் இறங்கினர்

பண்ணாரி அம்மன் கோவில் நடந்த குண்டம் திருவிழாவில் கொரோனா காரணமாக தலைமை பூசாரி‌ உட்பட 10 பேர் மட்டுமே குண்டத்தில் இறங்கினர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. வருடா வருடம் இக்கோவிலில் நடைபெறும் குண்டம் திருவிழாவிற்கு தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று குண்டம் இறங்குவது வழக்கம்.

கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக பண்ணாரி அம்மன் திருக்கோவில் குண்டம் திருவிழா ரத்து செய்யப்பட்டது.‌ இந்த ஆண்டு பண்ணாரி அம்மன் திருக்கோவிலில் குண்டம் திருவிழா நடைபெறும் என அறிவித்தனர்.

ஆனால் கொரானாா அச்சுறுத்தல் காரணமாக இதில் தலைமை பூசாரிகள் உட்பட்ட 10 பேர் மட்டுமே குண்டம் இறங்க அனுமதி எனவும் பொதுமக்கள் யாரும் குண்டம் இறங்க அனுமதி இல்லை எனவும் அறநிலைதுறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடைபெற்றது.

முன்னதாக பக்தர்கள் காணிக்கையாக அளிக்கப்பட்ட மரத்துண்டுகளை கொண்டு தீக்குண்டம் வளர்க்கப்பட்டது. பின்னர் அதிகாலை 4 மணி அளவில் மேளதாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மனை உற்சவர் குண்டத்திற்கு அழைத்து வந்தனர். குண்டத்தை சுற்றி கற்பூரம் ஏற்றியும் பூக்களைத் தூவியும் பூஜைகள் செய்யப்பட்டு தலைமை பூசாரி ராஜேந்திரன் உட்பட 10 பேர் குண்டம் இறங்கினார்கள்.

பல வருடங்களாக லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் குண்டம் திருவிழாவில் பொதுமக்கள் யாரும் குண்டம் இறங்க அனுமதி அளிக்கப்படாதது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai solutions for small business