பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறப்பு

பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து 120 நாட்கள் வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானியில் காலிங்கராயன் அணைக்கட்டு உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் பவானி ஆறு வழியாக காளிங்கராயன் அணைக்கட்டு வந்தடைகிறது. இங்கிருந்து வாய்க்கால் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரானது காளிங்கராயன் பாளையம், ஈரோடு, பள்ளிபாளையம், வெண்டிபாளையம், கருமாண்டம்பாளையம், பணப்பாளையம், கொடிமுடி வரை 56 மைல் தூரம் செல்கிறது. இப்பகுதிகளில் உள்ள 15 ஆயிரத்து 743 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன.

இந்நிலையில், இன்று முதல் நவம்பர் 17ஆம் தேதி வரை 120 நாட்களுக்கு வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாசனப்பகுதி விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மதகுகளை திறந்து வைத்தனர். இதனை தொடர்ந்து காலிங்கராயன் வாய்க்காலில் பொங்கும் நுரையுடன் சீறிப்பாய்ந்த தண்ணீருக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீரால் விவசாயிகள் கரும்பு, வாழை,மஞ்சள், நெல் உள்ளிட்டவைகளை பயிர் செய்து பயனடைய முடியும் என தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!