ஈரோட்டில் கடந்த 7 மாதத்தில் 59 போக்சோ வழக்குகள் பதிவு
பைல் படம்.
ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் குழந்தைகள் திருமணம், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காக்கும் கரங்கள் என்னும் பெயரில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு உடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக மலை கிராமங்களுக்கு சென்று அங்கு உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதைப்போல் குழந்தைகள் தாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டால் தைரியமாக அதை பெற்றோரிடம் தெரிவிக்கவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் மட்டும் 14 போக்சோ வழக்குகள் பதிவாகி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியா கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் பவானி, கோபி, பவானிசாகர், சத்தியமங்கலம் போன்ற கிராம பகுதியில் அதிக அளவு குழந்தைகள் திருமணம் நடந்து வருகிறது. இது குறித்து அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த காக்கும் கரங்கள் என்னும் பெயரில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுடன் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மலை கிராம மக்களிடம் குழந்தைகளின் திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
குழந்தை திருமணம் சட்டப்படி தவறு என்றும், அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்பது குறித்தும் பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதன் பயனாக தற்போது குழந்தைகள் திருமணம் குறைந்துள்ளது. இன்னும் சில இடங்களில் குழந்தைகள் திருமணம் ஏற்பாடு குறித்து எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகள் குறித்தும் எங்களுக்கு பல்வேறு புகார்கள் வருகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை குழந்தைகள் திருமணம் செய்ததாக 10 வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைப்போல் 59 போக்சோ வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 69 வழக்குகள் மாவட்டம் முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது போக்சோ வழக்குகள் குறைந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu