பவானி அருகே ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று

பவானி அடுத்துள்ள குட்டைமுனியப்பன் கோவில் பகுதியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, தமிழக சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள குட்டைமுனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநர் வெங்கடாசலத்திற்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், திங்கட்கிழமையன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் அவரது மனைவி, மருமகள் மற்றும் பேரன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, சுகாதாரத்துறையினர் அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் தடுப்பு வைத்து, மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே கொரோனா தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்காக, அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வணிகர்கள், தாமாக முன்வந்து தங்களது கடைகளை அடைத்துள்ளனர்.

Tags

Next Story
ai tools for education