ஈரோட்டில் 2,679 பேர் தபால் ஓட்டு மூலம் வாக்களித்துள்ளனர்

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் ஓட்டு சாவடிக்குச் சென்று வாக்களிக்க முடியாத 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிப்பு உள்ளதாக சந்தேகப்படும் வாக்காளர்கள் தங்களது ஓட்டுகளை தபால் மூலம் செலுத்தலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து இந்த பணிகள் துரிதமாக நடந்து வந்தன. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, பவானி சாகர் (தனி) ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 50 ஆயிரத்து 62 பேர் உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 14 ஆயிரத்து 597 பேரும் உள்ளனர். இவர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கு ஏதுவாக 12 டி படிவம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதியில் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து 80 வயதுக்கு மேற்பட்ட 4,413 வாக்காளர்களிடம் இருந்தும், 1022 மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்களிடம் இருந்து மொத்தம் 5,435 பேர் தபால் மூலம் ஓட்டு போட விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு ஓட்டு சீட்டு படிவத்துடன் உரிய கவர்களை வைத்து தயார் செய்து அவர்களது விலாசம் ஒட்டும் பணி நடந்தது.
காலை 8 மணிக்கு ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதியிலும் வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்க ஏதுவாக சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியின் சார்பில் வாக்கு சேகரிக்கும் குழுவினர் நேரடியாக வாக்காளர்கள் வீட்டுக்குச் சென்றனர். இந்த வாக்கு சேகரிக்கும் குழுவில் மண்டல அலுவலர் கண்காணிப்பாளராகவும், இரண்டு வாக்கு சேகரிக்கும் அலுவலர்கள், நுண் கண்காணிப்பு அலுவலர், வீடியோ கிராபர், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் ஒருவர் இடம்பெற்றிருந்தனர். மேலும் சம்பந்தப்பட்ட தொகுதியில் தேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களின் முகவர்கள் உடனிருந்து கண்காணித்தனர். சம்பந்தப்பட்ட வாக்காளர் வீட்டில் ஒதுக்குப்புறமான இடத்தில் 'ப' வடிவ அட்டைப் பெட்டியை வைத்து குறிப்பிட்ட வாக்காளருக்கு ஓட்டு போடும் சீல் கட்டை வழங்கி அதை மடித்து அதேபோன்ற கவரில் வைத்து சீலிடப்பட்ட பெட்டியில் தங்களது வாக்குகளை போட்டனர்.
இதற்காக மரத்தாலான பூட்டு போடும் வசதி கொண்ட ஓட்டு பெட்டி தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்டது. தபால் ஓட்டு போட்டபின் அவை பூட்டி சீல் வைத்து ஜி.பி.எஸ் கருவி பொருத்திய வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. இதேபோன்று ஒவ்வொரு வீட்டிலும் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் வாக்களித்தனர். அவர்களுக்கு ஏற்படும் சந்தேகத்தை அதிகாரிகள் விளக்கி கூறினர். ஈரோடு மாவட்டத்தில் இன்று நடந்த தபால் வாக்கு பதிவில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்தனர். இவை அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.மாலை 5 மணியுடன் தபால் ஓட்டு நிறைவு அடைந்தது. ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரு நாளில் நடந்த தபால் ஓட்டு பதிவு 5435 பேரில் 2679 பேர் தபால் ஓட்டு மூலம் தங்களது வாக்கு பதிவினை பதிவு செய்துள்ளனர். இதில் விடுபட்டவர்களுக்கு அடுத்த வாய்ப்பாக நாளை மறுநாள் (புதன்கிழமை) மீண்டும் தபால் ஓட்டு போட அந்தந்த பகுதி வாக்கு சேகரிக்கும் குழுவினர் மீண்டும் சம்பந்தப்பட்டவர்கள் வீட்டுக்கு நேரடியாக செல்வார்கள். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu