தேர்தல் கட்டுப்பாடுகள் நீங்கியதால் வியாபாரிகள் நிம்மதி

தேர்தல் கட்டுப்பாடுகள் நீங்கியதால் வியாபாரிகள் நிம்மதி
X

தேர்தல் முடிந்ததால் பறக்கும்படை சோதனை நிறைவு பெற்று பணம், நகை எடுத்துச் செல்லக் கட்டுப்பாடுகள் நீங்கியதால் வியாபாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வந்தனர். இதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 128 பேரிடம் ரூ. 2 கோடியே 31 லட்சத்து 39 ஆயிரத்து 938 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. இதில் 77 பேர் உரிய ஆவணங்கள் காட்டியதால் ரூ.1 கோடியே 58 லட்சத்து 63 ஆயிரத்து 230 ரூபாய் உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. மீதியுள்ள 51 பேரின் 72 லட்சத்து 76 ஆயிரத்து 708 ரூபாய் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் ஈரோடு மாவட்டத்தில் கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை, ஜவுளிசந்தை ,மஞ்சள் ஏலம் போன்றவற்றில் பங்கேற்க வியாபாரிகள் தயக்கம் காட்டி வந்தனர். இதனால் மாட்டு சந்தை, ஜவுளி சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. வியாபாரமும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் முடிந்த மறுநாள் முதல் அதாவது நேற்று முதல் பறக்கும் படை சோதனை விலக்கிக் கொள்ளப்பட்டது. ரூ 50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்ல எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. அதேபோல் ஆவணங்கள் வைத்திருக்க வேண்டிய நிபந்தனையும் விலக்கிக் கொள்ளப்பட்டது. கட்டுப்பாடுகள் நீங்கியதால் வணிகர்கள் மற்றும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

Tags

Next Story