சங்கமேஸ்வரர் கோவில் தேர் வெள்ளோட்டம்
ஈரோடு மாவட்டம் பவானியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. காவேரி, பவானி, அமுத நதி என மூன்று நதிகள் சங்கமிக்கும் இந்த கோவிலானது முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.
ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது மட்டுமின்றி குறிப்பாக சித்திரை மாதம் திருத்தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான திருத்தேர் ஆனது பல ஆண்டுகள், பழுது ஏற்பட்ட காரணத்தினால் தேரோட்டம் நடத்த முடியாதபடி நிறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்த பெருமக்களின் பெரும் உதவி மூலம் ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய புதிய தேர் உருவாக்கப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிகள் செய்து முடிக்கப்பட்ட நிலையில் இன்று புதிய தேர் வெள்ளோட்ட திருவிழா நடைபெற்றது. தேர் மலர்களால் அலங்கரிப்பட்டு மகா தீபாரதனை நடத்திய பின்னர் பஜனை கோயில் வீதி வழியாக புறப்பட்ட தேரோட்டம் முக்கிய வீதி வழியாகச் சென்று தேர் வீதியில் தேர் நிலை நிறுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சங்கமேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கே.எம்.எஸ். பழனிச்சாமி, பவானி நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணராஜ், சங்கமேஸ்வரர் கோவில் ஆணையாளர் சபர்மதி மற்றும் கோவில் பணியாளர்கள், சிவனடியார்கள், ஊர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்துச்சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu