கொடிவேரி அணையில் ஏராளமான நகை அணிந்துகொண்டு குளித்த அதிமுக பிரமுகர்
ஈரோடு : கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் பொங்கல் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை இரண்டு நாட்களாக அதிகரித்து வருகிறது.
அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளிக்கும் பெண்களும் குழந்தைகளும்
கொடிவேரி அணையில் அருவி போல் கொட்டும் தண்ணீரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பல மணி நேரம் நின்று குளித்தும், அருகில் உள்ள பூங்காவில் குழந்தைகளுடன் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர்.
ஏராளமான நகையுடன் அணையில் குளித்த வாலிபர்
இந்நிலையில் கொடிவேரி அணையில் ஏராளமான நகை அணிந்துகொண்டு வாலிபர் ஒருவர் குளித்துக்கொண்டு இருப்பதாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்
அதைத்தொடர்ந்து பங்களாபுதூர் போலீசார், அந்த வாலிபர் குளித்துக்கொண்டு இருந்த பகுதிக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த நபரை சுற்றியுள்ள கும்பலையும் போலீசார் கண்காணித்து வந்தனர்.
போலீசார் வெளியே அழைத்து வந்து விசாரணை
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகியும் அந்த வாலிபர் அணையில் இருந்து வெளியேறாத நிலையில் அந்த நபரை சுற்றிலும் கூட்டம் அதிகரிக்க, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அணைக்குள் சென்று அந்த நபரை வெளியே பாதுகாப்பாக அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி விஜய் என்பதும், பொங்கல் விடுமுறைக்கு கொடிவேரி அணைக்கு குடும்பத்துடன் வந்திருப்பது தெரியவந்தது.அதைத்தொடர்ந்து பாதுகாப்பு கருதி அதிமுக பிரமுகரை போலீசார் குடும்பத்துடன் அணையில் இருந்து வெளியேற்றினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu