நீரை விஷமாக மாற்றிய நிறுவனம்

நீரை விஷமாக மாற்றிய நிறுவனம்
X
சென்னிமலை அருகே, நச்சு கழிவு ஊற்றி பேரழிவை ஏற்படுத்தும் தொழிற்சாலை

சென்னிமலை அருகே பெருந்துறை சிப்காட்டில் செயல்பட்டு வந்த ஆர்.கே.ஸ்டீல்ஸ் நிறுவனத்தில் இருந்து, டேங்கர் லாரிகள் மூலம் அமில கழிவுநீர் எடுத்துச் செல்லப்பட்டு, நசியனூர் அருகே ஆட்டையம்பாளையம் பகுதியின் கீழ்பவானி கசிவுநீர் ஓடையில் விடப்பட்டது. இந்த விஷத்தன்மை கொண்ட கழிவுநீர் கரைந்ததால், அப்பகுதியில் உள்ள தடுப்பணை, ஓடை, கிணறுகள் மற்றும் போர்வெல்களில் நீரின் நிறம் மாறி, பல்வேறு கிராம மக்கள் பாதிக்கப் பட்டனர். இந்த சம்பவம் மாவட்ட அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுக்கட்சிகள் இந்த சம்பவத்தைக் கடுமையாக கண்டித்து, ஆலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலரின் கணவர் புகார் அளித்ததை அடுத்து, சித்தோடு போலீசார் ஆர்.கே.ஸ்டீல்ஸ் நிறுவனம் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணையின் அடிப்படையில், சென்னை மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமையகம், ஆர்.கே.ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பை துண்டிக்க உத்தரவிட்டது. இதன்பேரில், மின்வாரிய அதிகாரிகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆகியோர் நேற்று மின் இணைப்பும் குடிநீர் இணைப்பும் துண்டித்தனர். இதனுடன், நிறுவனம் தானாகவே ஆலையை மூடிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஆலையை முறையாக ‘சீல்’ செய்ய அரசு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்ட பின்னர், அதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story