ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 1261 பேருக்கு தொற்று

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 1261 பேருக்கு தொற்று
X

ஈரோடு தாலுகா காவல்  நிலையத்தில் 5 போலீசாருக்கு கொரோனா உறுதியானது 

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 1261 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் 5 போலீசாருக்கு கொரோனா

தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் கடந்த 7ஆம் தேதி முதல் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

முதலில் மாநகரப் பகுதியில் வேகமாக பரவிய கொரோனா தற்போது கிராமப்புற பகுதியில் வேகமாக பரவி வருகிறது. இதேபோல் முன் களப்பணியாளர்களான காவல்துறையினர் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமை காவலர்கள், காவலர்கள் என தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதில் பெரும்பாலானவர்கள் லேசான அறிகுறி என்பதால் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர். இது வரை ஈரோடு மாவட்டம் முழுவதும் 164 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 5 போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கையாக காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. காவல் நிலையத்திற்கு மனு கொடுக்க வரும் பொதுமக்கள் வெளியே நின்று மனு கொடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதேபோல் ஈரோடு பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் புறநகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சி பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் காவல்துறையினருக்கு தொற்று பரவி வருவதால் மற்ற காவலர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

சுகாதாரத் துறையினர் வெளியிட்ட பட்டியல் படி, ஈரோடு மாவட்டத்தில் மேலும் 1261 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் இதுவரை பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 23 ஆயிரத்து 689 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 937 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 515 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 72 வயது முதியவர் மற்றும் 74 வயது முதியவர் என இருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்புடன் 8,450 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் லேசான அறிகுறி உள்ளதால் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
why is ai important to the future