ஈரோட்டின் அறியப்படாத அடையாளம்

ஈரோட்டின் அறியப்படாத அடையாளம்
X
ஈரோடு மக்களின் வாழ்வாதாரமான பவானிசாகர் அணையைப் பெற்றுத் தந்த பாசனத் தந்தை தியாகி M.A.ஈஸ்வரன் அவர்களின் வரலாற்றையும், தேசத்திற்காக அவர் ஆற்றிய பணிகளையும் இன்றைய தலைமுறையினரும் அறிந்து கொள்ள பகிர்ந்து கொள்கிறோம்.

அது 1800 காலக்கட்டம் தமிழகத்தையே உலுக்கியெடுத்தது தாது வருடப்பஞ்சம். அந்த பஞ்சத்தில் பல லட்சம் மக்கள் உயிரிழந்தனர். அதற்கு கொங்கு நாடும் தப்பவில்லை. கொங்கு நாட்டைச்சுற்றி காவிரி, பவானி, நொய்யல் இன்னும் நிறைய நதிகள் ஓடியிருந்தாலும் மழை பொய்த்துப் போனதால், அனைத்து நிலங்களும் தரிசாகவே கிடந்தது. இயற்கை பேரிடர்களாலும், நீராதாரத்தை முறைப்படுத்தாத ஆளுமைகளாலும் பாழாய்ப் போனது பூமி.

கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் இல்லை. மண்ணில் விதைப்பதற்கு தானியங்களும் இல்லை. இருந்த விதை நெல்லையும் கூட உணவுக்குப் பயன்படுத்தும் நிலையில், பஞ்சம் பிழைக்க வெவ்வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்தனர் மக்கள்.

கொங்கு பகுதி இப்படியொரு நிலைக்கு தள்ளப்பட்டது. இதை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும். இந்த வறண்ட நிலம் செழிக்க, இந்த ஆறுகளை எப்படி பயன்படுத்துவது என்று சிந்தித்தவர் ஈஸ்வரம் .

இன்று ஈரோட்டை மஞ்சள் நகரம் என்கிறோம். இந்த நிலமெங்கும் பசுமை போர்த்தியிருப்பதை காண்கிறோம். வாய்க்கால்கள் முழுவதும் தண்ணீர் ஓடுவதை காண்கிறோம். கரும்பு, நெல், வாழை என வளம் கொழிக்கும் விவசாயத்தையும், விவசாயிகளின் முகங்களில் மலர்ச்சியையும் காண்கிறோம்.

ஆனால் நீங்கள் பார்க்கும் இத்தனை மாற்றங்களும் சாத்தியமானது அவரால்தான்.

நாம் உண்ணும் ஒவ்வொரு கைப்பிடி சோற்று கவளத்திலும் அவரது பெயரை நாம் நினைத்திருக்க வேண்டும்.

ஆனால் என்றாவது நினைத்திருப்போமா?

மேட்டாங்காடாய் இருந்த லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள், இன்று பசுமையாய் மாறியிருப்பதற்கு பின்னால் ஒருவர் இருந்திருக்கிறார் தெரியுமா?.

இப்படி வரலாறு முழுவதும் மறைக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட மாமனிதர் ஒருவர் நம் மண்ணில்தான் வாழ்ந்திருக்கிறார்.

எங்காவது அவரது பெயரை கேள்விப்பட்டிருக்கிறீர்ளா?

எத்தனையோ சிலைகள் இருக்கிறதே, அவருக்கென்று ஒரு சிலையை பார்த்திருக்கிறீர்களா?

மறந்து போன அந்த மாமனிதர், இந்த பூமியில் பிறந்தபோது இந்தியா ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்தது.

மக்கள் இந்த தேச விடுதலைக்காக பல்வேறு வகை முன்னெடுத்துக் கொண்டிருந்தனர். இந்திய தேசிய இயக்கம் இந்தக் காலக்கட்டத்தில் தான் வேரூன்ற ஆரம்பித்தது. சுதந்திர தாகம் கொண்ட இளைஞர்களும், பொதுமக்களும் அதில் தங்களை இணைத்துப் போராடத் தொடங்கினர்.

போராட்டத்தோடு போராட்டமாக மக்கள் வறட்சியையும், வறுமையையும் சேர்த்தே சந்தித்தனர். அப்போதுதான் தென்மாவட்டங்கள் பயன்பெறும் வகையிலான ஆங்கிலப் பொறியாளர் பென்னிக்குவிக் முல்லைபெரியாறு அணையை கட்டி முடித்தார். அணை கட்டி முடிக்கப்பட்டு, 1895ஆம் வருடம் அக்டோபர் 10ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த நிலங்கள் வளம் பெற்றன.

அதே வேளையில், காலம் தனது அற்புதத்தை கொங்கு மண்ணில் நிகழ்த்தியது.

ஆம், வரமாய் வந்து பிறந்தது அந்த குழந்தை....

1895ம் வருடம் அக்டோபர் 21ம் தேதி.

காவிரி கரை புரண்டோடும் ஆற்றங்கரையில் அமைந்த கருங்கல்பாளையத்தில் முத்துக்கருப்பண பிள்ளை, வெங்கடலட்சுமி தம்பதியனருக்கு அந்த குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அர்த்தநாரீஸ்வரன் என பெற்றோர் பெயரிட்டனர். ஆனால் குழந்தையை எல்லோரும் ஈஸ்வரன் என்றே அழைத்தனர்.

சிறுவன் ஈஸ்வரன் தனது தந்தையாரோடு எப்போதும் காவிரிக்கு குளிக்கச்செல்வது வழக்கம். ஆனால் வெறுமனே விளையாட்டுத்தனமாய் குளித்துவிட்டு வருபவன் அல்ல ஈஸ்வரன். அவனுக்குள் வித்தியாசமான கேள்விகள் எழும்.

காவிரிக்கரையோரம் மட்டுமே பசுமை... மீதியெல்லாம் வறட்சி... ஏன் இந்த வேற்றுமை?..

கேள்விகளோடு கேள்விகளாக ஈஸ்வரன் வளர்ந்தான். ஆரம்பகல்வியையும், உயர்நிலைகல்வியையும் ஈரோட்டில் படித்தான். அவன் வகுப்பறையில் இருந்த நேரத்தை விட அருகில் இருந்த வாசகசாலையில் இருந்தே நேரங்களே அதிகம். வாசக சாலையோடு அப்படியொரு உறவு ஈஸ்வரனுக்கு...

ஈஸ்வரன் வாசக சாலையில் நிறைய படித்தான். புதியன கற்றான். பழையன உணர்ந்து புதுமையை தன்னுள் வியாபித்தான். ஈஸ்வரனுக்கு தமிழை விட ஆங்கிலத்தின் மீதே ஆர்வம் அதிகம். தமிழ் புத்தகங்களை காட்டிலும் ஆங்கில புத்தகங்கள் மற்றும் ஆங்கில பத்திரிகைகளையே படித்தான்.

1918ம் ஆண்டு தனது பள்ளி படிப்பை நிறைவு செய்தான் ஈஸ்வரன். அடுத்து அவன் சென்றது திருச்சிராப்பள்ளி புனித ஜோஸப் கல்லூரி..

கல்லூரி வாழ்க்கை ஈஸ்வரனை மெருகூட்டியது. அறிவை பட்டைத்தீட்டியது. ஈஸ்வரன் தனது விடுமுறை நாளில் திருச்சிராப்பள்ளியை சுற்றி பார்க்க செல்வது வழக்கம். ஒரு முறை அப்படி சென்றது கரிகாலன் கட்டிய பிரமாண்ட கல்லணை. ஈஸ்வரன் வியந்தான். அடுத்து அவன் சென்றது தென்மாவட்டத்தின் முல்லைபெரியாறு அணை...

ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிக்கவிக் கட்டிய முல்லைபெரியாறு அணையை பார்த்து அதியசயித்தான் ஈஸ்வரன்..

திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் பகுதிகளுக்காக ஒரு கல்லணை...

தென்மாவட்டங்களுக்காக ஒரு முல்லை பெரியாறு...

அப்போது ஈரோட்டிற்கென..

வறண்ட பூமியான ஈரோட்டை எப்படி மாற்றுவது?

ஈஸ்வரன் மனதிற்குள் எண்ண அலைகள் சுழன்றன.

அதே காலக்கட்டம்.

சுதந்திர வேட்கை நாடெங்கும் பெருகிறது. அப்போதுதான் அந்த ரத்தவெறியாட்டம் பஞ்சாபில் அரங்கேறியது.

ஜாலியன் வாலாபாக் படுகொலைகள்... ஈஸ்வரனை உலுக்கியெடுத்த சம்பவம் அரங்கேறியது...

ஆங்கிலேயர்களின் அடிமை முறையை எதிர்த்து, அடிமைப்பட்டு கிடந்த தாய் மண்ணின் சுதந்திரத்திற்கான தாகம் ஈஸ்வரனுக்குள் துளிர் விட்டது...

தான் பிறந்தது தனக்காக அல்ல...

ஒரு குடும்பத்திற்காக அல்ல...

ஒரு ஊரிற்காக அல்ல...

ஒரு பகுதிக்காக அல்ல...

இந்த தேசத்திற்காக...

இந்த தேச நலனுக்காக..

ஈஸ்வரன் மாணவர் போராட்டத்தில் கலந்து கொண்டான். ஆங்கிலேயர்களுக்கு எதிரான தீப்பிழம்புகள் போராட்டத்தில் வார்த்தைகளாக புறப்பட்டது. ஈஸ்வரன் சுதந்திர காற்றை சுவாசிக்க ஆர்வம் கொண்டான்... அவன் கண்கள் மலர்ந்தன... அவன் கைகள் நீண்டன... வார்த்தைகளை பெருங்குரல் எடுத்து உதிர்த்தான்...

"வந்தே மாதரம்..."

ஈஸ்வரன் உணர்வு பொங்க முழங்கிக்கொண்டே இருந்தான்.

அவனுக்கு சுதந்திர வேட்கை நாளுக்கு நாள் அதிகமானது. திருச்சிராப்பள்ளியில் நடந்த சுதந்திரப்போராட்டங்களிலும், கூட்டங்களிலும் பங்கெடுத்தான். எங்கெல்லாம் போராட்டம் நடந்தததோ அங்கெல்லாம் ஈஸ்வரன் இருந்தான். இதை கவனித்து வந்த கல்லூரி பேராசிரியர் ஒருவர் ஈஸ்வரனை சுதந்திர வேள்வியின் அடுத்த நிலைக்கு அழைத்துச்சென்றார். ரகசியக்கூட்டம் ஒன்று..

சிம்னி விளக்கின் சிறு வெளிச்சத்தின் மகாகவி பாரதியை பார்த்தான் ஈஸ்வரன். பாரதியின் சொற்களோடு படித்து பழகியவனுக்கு, பாரதியின் முகமும், அவர் பேசிய வார்த்தைகளும் ஈஸ்வரனுக்குள் நம்பிக்கை வெளிச்சம் பிறந்தது.

ஒத்துழையாமை இயக்கம் அறிவிக்கப்பட்டு நாடெங்கும் அஹிம்சை வழியிலான போராட்டங்கள் நடந்தன. 1920ம் ஆண்டு மகாத்மா காந்தி ஈரோடு வந்தார். ஈரோடு ரயில் நிலையத்தில் அதிகாலை வந்த காந்தியை குழுமியிருந்த கூட்டத்தில் ஒருவனாக, தூரமாக பார்த்தான் ஈஸ்வரன்.

காந்தியெனும் மகத்தான ஆளுமை ஈஸ்வரனுள் ஆக்ரமித்தார். காந்தியிம் தரிசனம் ஈஸ்வரனை வேகமாக இயங்கச்செய்தது.

கல்லூரிக்குள்ளேயே சக மாணவர்களை அழைத்து சுதந்திரத்திற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தினான். ஈஸ்வரனை கவனித்த கல்லூரி நிர்வாகம் அவனை அழைத்து எச்சரித்தது. எச்சரிக்கையை மீறி சுதந்திரமெனும் தீ ஈஸ்வரனுள் சுடர்விட்டு எரிந்தது.

அப்போதுதான் ஈரோட்டுத் தலைவர்களிடம் இருந்து எதிர்பாராத அழைப்பு அவனுக்கு வந்தது.

நாக்பூரில் நடக்கவிருக்கும் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அது..

ஈஸ்வரன் நாக்பூர் பயணத்தில் அவன் வெறுமனே மாநாட்டில் மட்டும் பங்கு கொள்ளவில்லை. மகாத்மா காந்தியோடு ஒரே மேடையிலும் பங்கு கொண்டான்.

காந்தியின் உரையை தமிழில் அழகுற மொழிபெயர்த்தான் ஈஸ்வரன். மாணவன் ஈஸ்வரன் காந்தியின் மனதில் தனித்து இடம் பெற்றான்.

நாக்பூர் பயணம் பயணம் முடித்து திருச்சிராப்பள்ளி திரும்பினான். தொடர்ந்து காந்தி சுதேசிய கொள்கைகளை நாடெங்கும் தீவிரப்படுத்தினார். சுதந்திர தாகம் கொண்ட மக்கள் சுதேசிய பொருட்களையே பயன்படுத்தினர். ஆங்கிலேய அரசிடமிருந்து பெற்ற பட்டங்களையும், பதவிகளையும் துறந்தனர்.

ஈஸ்வரன் தனது கல்லூரி நூலகத்தில் தனியாக அமர்ந்து யோசித்தான்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடும் நான், அவர்களது கல்லூரியில் படிப்பதா?...

தீர்க்கமாக ஒரு முடிவு எடுத்தான். பாதியிலேயே கல்லூரிப்படிப்பை விட்டு வெளியேறினார்.

தொடர்ந்து சொந்த ஊரான ஈரோடு திரும்பினான். ஈஸ்வரன் படிப்பை விட்ட செய்தியறித்து குடும்பத்தினர் திகைத்தனர். இருந்தாலும் ஈஸ்வரன் உயரிய எண்ணத்தை அவர்கள் புரிந்து கொண்டனர்.

1921ம் ஆண்டு மகாகவி பாரதி ஈரோடு வந்தார். ஈஸ்வரனைப்பற்றி நிறைய கேள்விப்பட்டு ஈரோடு வந்த பாரதி, ஈஸ்வரின் சுதந்திர வேள்வியை பாராட்டினார். கருங்கல்பாளையம் வாசக சாலையின் திண்ணையில் பாரதியும், ஈஸ்வரனும் ஒரு இருவு முழுக்க தேசிய சிந்தனைகள் குறித்து, நாட்டின் சுதந்திரம் குறித்து பேசினர். தெருவில் நடந்தனர். அங்குள்ள மாரியம்மன் சந்நதியை நோக்கி,

"எதையும் தருவாள் சக்தி... பெரிதும் பெரிது கேளடா ஈஸ்வரா" என்றார்.

பாரதியின் இந்த வார்த்தை, ஈஸ்வரனுள் சுதந்திர தாகம் பிரவாகம் எடுத்தது.

மனிதனுக்கு மரணமில்லை...

பாரதி வாசகசாலையில் ஆற்றிய உரை இதுதான்... இதுவே அவரது இறுதி உரையாகும். ஊர் திரும்பிய சில நாளில் அவர் காலமானார்.

பாரதியின் இறப்பு, ஈஸ்வரனுக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்தாலும் அவரது பாடல்களும், அவர் பேசிய வார்த்தைகளும் ஈஸ்வரன் நெஞ்சை உறுதி ஆக்கியிருந்தது.

அதே வருடம் மகாத்மா காந்தி மதுரை வந்தார்..

மதுரை மக்களின் வறுமையான வாழ்வை கண்டு மனம் வருந்தினார். மேல் சட்டையற்று ஏழ்மையான மக்கள் அவர் கண் முன் நடந்து சென்றனர்.

"என் நாட்டு மக்கள் என்று முழு ஆடை அணிகிறார்களோ, அன்றுதான்நான் முழு ஆடை அணிவேன்..."

இப்படி சூளுரைத்த காந்தி குஜாராத் கலாச்சார ஆடையிலிருந்து அரையாடைக்கு மாறினார்.

இந்த செய்தி நாடெங்கும் பரவ, ஈஸ்வரனுக்கும் தெரிந்தது. ஈஸ்வரனும் ஒரு முடிவு எடுத்தான்..

அது முடிவு அல்ல சபதம்...

ஈஸ்வரன் குடும்பத்தில் ஏற்கனவே அவருக்கு பெண் பார்த்துகொண்டிருந்தார்கள். ஈஸ்வரன் திருமணத்தை மறுத்து, இனி நாடு சுதந்திரமடையும் வரை திருமணமே செய்து கொள்ள மாட்டேன்..

காந்தியை போல சபதமெடுத்தான்.

மண்ணில் நடந்தான்... இன்னொரு சபதம் எடுத்தான்.. தெருவில் செருப்பை கழற்றிவிட்டான்...

வெயிலோ, மழையோ, புயலோ... இந்த மண்ணை என் பாதங்கள் தொட்டு உணர்ந்து கொண்டே இருத்தல் வேண்டும்... நாடு சுதந்திரம் வரை வரை நான் செருப்பு அணிய மாட்டேன்...

ஈஸ்வரனின் அன்று எடுத்த அந்த சபதத்தில் இருந்து வெறும் கால்களோடு நடக்கத் தொடங்கினான்.

தொடர்ந்து ஈரோட்டில் நடந்த சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டான். கள்ளுக்கடைப்போராட்டம், அன்னியதுணிகளை கொளுத்தும் போராட்டம் என எல்லா போராட்டங்களையும் கலந்து கொண்டான். சிறைவாசமும் மேற்கொண்டான்.

1922ம் ஆண்டு ஈரோட்டில் விவசாய சங்க கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் விவசாய சங்கத்தலைவராக ஈஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டான்.

அதே வருடம் நாக்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. உத்தரவை மீறினார் ஈஸ்வரன். நாக்பூரில் ஆறு மாத சிறை வாசம்... அதுவும் கொடுமையான தனிமைச்சிறை.

சணலால் ஆன துணியை அணிந்தார். கருங்கல்லை உடைக்கும் பணி, ஈவு, இரக்கமற்ற அடி, உதை... என கொடும் சிறை.

சிறை வாசம் முடிந்து ஈரோடு திரும்பினார் ஈஸ்வரன். அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் அன்புத்தந்தை காலமாயிருந்தார். இழப்பையும், வலியையும் கடந்து தேச விடுதலை வேண்டி அடுத்த போராட்டங்களில் கலந்தார் ஈஸ்வரன். கேரள வைக்கம் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ஈஸ்வரனை வைக்கத்தில் காவலர்கள் கடுமையாக தாக்கினார்கள். இதில் அவர் மயக்கமடைந்து, தரையில் விழுந்தார். ஈஸ்வரனை காவலர்கள் இழுத்துச்சென்று ஒரு காட்டுக்குள் வீசினர். குற்றுயிரும், குலையிருமாக உயிருக்குப்போராடினார் ஈஸ்வரன்.

ஒரு இரவு முழுக்க மயக்க நிலையிலேயே கிடந்தார். அடுத்த நாள் காலை காட்டில் ஆடு மேய்க்கும் சிறுமி ஒருத்தி ஈஸ்வரனது நிலையை கண்டாள். ஈஸ்வரனுக்கு தண்ணீர் கொடுத்தாள். அவரை கைத்தாங்கலாக தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று உணவு கொடுத்தாள். அங்கிருந்து ரகசியமாக தமிழ் போராளிகளுடன் சென்றடைந்தார் ஈஸ்வரன்.

தொடர்ந்து ஆங்கிலேய அடக்கு முறைகளுக்கு எதிராக போராடினார் ஈஸ்வரன். பொள்ளாச்சியில் ஒரு கண்டனக்கூட்டத்தில் ஈஸ்வரன் ஆவேசமாக பேசினார். ஈஸ்வரனை கைது செய்த காவலர்கள் அவரை பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் வழியில் முட்கள் நிறைந்த காட்டிற்கு கொண்டு சென்றனர். அவரை அடித்து துன்புறுத்தினர். இதில் மேலும் ஒரு கொடுமையாக சிம்டா எனும் வதை கருவியை கொண்டு ஈஸ்வரனது மீசை முடியை ஒவ்வொன்றாக பிடுங்கி எறிந்தனர். ஈஸ்வரனுக்கு வலி உயிரைக் குடித்தது.

ரத்தமும், சதையுமாக சிதைந்து ஈஸ்வரனது முகம் வீங்கியது. முட்புதரில் ஈஸ்வரனை தூக்கி வீசிச்சென்றனர் ஆங்கிலேயர்கள். ஈஸ்வரனது முனகல் சத்தம் கேட்டு விறகுவெட்டிகள் அவரை காப்பாற்றினர்.

ஈஸ்வரன் வலிகளை, உடல் வதைகளை தாண்டி போராட்டங்களை முன்னெடுத்தார்.

ஆலேயப் பிரவேசப்போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். உப்பு சத்யா கிரக போராட்டத்தில் காந்தியோடு கலந்து கொண்டு உப்பு எடுத்தார். ஈஸ்வரன் போராட்ட களத்தில் அவரோடு மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் திரண்டனர். அவர் நாட்டின் சுதந்திரத்திற்காக அனைத்து வகை போராட்டங்களையும் முன்னெடுத்தார்.

தனது பூர்வீக சொத்துக்களை பூமி தான இயக்கத்திற்கு எழுதிக்கொடுத்தார்.

போராட்டங்களோடு நிற்பது மட்டுமின்றி ஈஸ்வரன் சமுக மலர்ச்சிக்கு தேர்தல் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று முடிவு செய்தார். கோவை மற்றும் பாராளுமன்ற தொகுதிகளின் காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக பணியாற்றி அவர்களை வெற்றி பெறச் செய்தார்.

தொடர்ந்து ஈரோடு நகர்மன்றத்துணைத் தலைவராக ஈஸ்வரன் தேர்வு செய்யப்பட்டார். 1938ம் ஆண்டு முதல் 1940 வரை அவர் துணைத்தலைவராக சிறப்புற செயல்பட்டார்.

1942ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை முன்னெடுத்த ஈஸ்வரன் ஈரோட்டில் மிகப்பெரிய இளைஞர் பட்டாளத்தை ஒருங்கிணைத்தார். அரசு இயந்திரத்தையே ஸ்தம்பிக்கும்படி செயல்பட்டார் ஈஸ்வரன். இந்தப்போராட்டத்தின் விளைவாக ஓராண்டு சிறை வாசமும் அனுபவித்தார்.

1946ம் ஆண்டு சென்னை மகாண சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்காக தேதி அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் வேட்பாளராக களம் இறங்க அனைவரும் விரும்பினர். ஈஸ்வரன் அந்த தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்றார். அதே நேரம், ஆந்திரகேசரி பிரகாசம் ஆட்சி தலைமையேற்க, ஒரு வாக்கு தேவைப்பட்டது. அந்த ஒரு வாக்கிற்காக அவர் ஈஸ்வரனது ஆதரவை நாடினார்.

ஈஸ்வரன் அவருக்கு ஆதவு தர விரும்பி ஒரு கோரிக்கையை விண்ணப்பித்தார்.

ஈரோடு தொகுதியின் தண்ணீர் பாசனத்திற்காக்க கீழ்பவானி பாசனத்திட்டத்தை நீங்கள் நிறைவேற்றித்தர வேண்டும் இந்த கோரிக்கைதான் அது.

ஏ.டி பிரகாசமும் அதை நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து நடந்த சட்டசபைக்கூட்டத்தில் தனது கோரிக்கை குறித்து வினா எழுப்பினார் ஈஸ்வரன்.

இந்த வினாவிற்கு பதில் அளிக்க மறுத்து, மேல்பவானி பாசன திட்டத்திற்குத்தான் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என்று ஏ.டி பிரகாசம் கூறினார்.

இதைக்கேட்டு கடும் சினங்கொண்ட ஈஸ்வரன் தனது பதவியை அப்போதே தூக்கி எறிந்தார். தான் கொண்ட கோரிக்கையையும், உறுதியையும் நிறைவேற்றத்தவறிய அரசை கண்டித்தார். சென்னையில் இருந்து ஈரோடு திரும்பினார்.

ஆனால் ஏ.டி பிரகாசம் அவரை சமாதானப்படுத்த உயர் அதிகாரிகளை அனுப்பினார். ஈஸ்வரன் எதற்கும் உடன்படாததால், கீழ்பவானி பாசனத்திட்டம் நிறைவேற்ற அரசு ஒப்புதல் வழங்கியது.

1948ம் வருடம் பவானிசாகர் அணை கட்டுமானப்பணிகள் தொடங்கியது. பிரமாண்டமான இந்த அணையை கட்ட வெளிநாடுகளில் இருந்து நவீன இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. சுற்று வட்டாரப்பகுதிகளில் இருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

ஈரோடு பசுமையாக வேண்டும் என்று ஈஸ்வரன் தனது பதவியை துறந்து, கனவு கண்ட அவர் கண் முன் பவானிசாகர் அணை கட்டப்பட்டு வளர்ந்தது. ஆனால் ஈஸ்வரனோ அரசு மற்றும் அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்டு வந்தார்.

தனக்கு நேர்ந்த அவமானம் மற்றும் புறக்கணிக்கப்புகளை கடந்து ஈஸ்வரன் அணை கட்டுமானப் பணிகள் மீது கவனம் செலுத்தி அதில் நடந்த சிறு, சிறு பிரச்சனைகளை தீர்த்து வைத்தார்.

1955ம் வருடம் ஈஸ்வரன் ஐயாவின் கனவு நிறைவேறியது அணைக்கான பணிகள் முடிக்கப்பட்டு, திறப்பு விழா இனிதாக நடந்தது. அன்றைய முதல்வர் காமராஜர் விழாவில் கலந்து கொண்டு பாசன நீரை திறந்து வைத்தார். ஆனால் இதற்காக பாடுபட்டு, பதவியை துறந்த ஈஸ்வரனுக்கோ விழாவில் அழைப்பில்லை.

இதை உணர்ந்த காமராஜர் ஈஸ்வரன் வரவில்லையா என்று அதிகாரிகளிடம் கேட்டு விசாரித்தார். தொடர்ந்து காமராஜர் கருங்கல்பாளையத்தில் உள்ள ஈஸ்வரனது வீட்டிற்கு சென்று விசாரித்தார். ஈஸ்வரன் ஐயா அவரது குடும்ப வறுமையை நேரில் கண்ட காமராஜர் அரசின் தியாகிகள் உதவி பெறும் திட்டத்தில் இரண்டு ஏக்கர் நிலத்தை ஒதுக்கினார்.

அரசு உதவிகள் ஏதும பெறாத ஈஸ்வரன், காமராஜரின் கட்டாயத்தின் பேரில் அந்த சொத்தை வாங்கினார். ஆனால் அப்போதிருந்த அரசியல்வாதிகள் அதையும் அரசியல் ஆக்கினர்.

தியாகிகளுக்காக அரசு நிலம் அளித்தார், அது தியாகத்துக்கு கூலி அளித்த மாதிரி அல்லவா ஆகிவிடும்... என்று கேள்வி எழுப்ப ஈஸ்வரன் ஐயா சொத்தை திருப்பிஅளித்தார்.

ஈஸ்வர ஐயா தனது இறுதி காலத்தில் செம்மையாக வாழ்ந்தார். குடும்பத்தில் வறுமை படர்ந்தாலும் தன்னை தேடித்தரும் மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகள் செய்தார் .

ஈஸ்வர ஐயா கனவு கண்டவை, லட்சியம் பூண்டவை யாவும் நிறைவேறிவிட்டது. இந்தியா சுதந்திரமடைந்துவிட்டது. ஐயா சுதந்திர காற்றை சுவாசித்தார். வறண்டு கிடந்த ஈரோடு பவானிசாகர் அணையால் பசுமையாக மலர்ந்து விட்டது.

தொடர்ந்து அப்போதைய அரசியலால் ஈஸ்வர ஐயா புறக்கணிக்கப்பட்டாலும், அவரது மக்கள் பணி தொடர்ந்தது. மாணவர்களை, இளைஞர்களை ஒன்றிணைந்து காவிரிக்கரையில் மரக்கன்றுகள் நட்டார். வாசக சாலையில் வகுப்பு எடுத்தார். அரிஜன மக்களுக்கு கல்வி போதித்தார்.

80 வயதை கடந்து ஈஸ்வரன் ஐயாவிற்கு வயோதிகம் சூழ்ந்தது. அவர் இளமையில் தேசத்திற்காக, மக்களுக்காக ஓடி, ஓடி உழைத்த தோள்கள், காலணியற்று நடந்த கால்கள் தேய்ந்தன.

வாசக சாலைக்கும், வீட்டிற்கும் என அவரது இறுதி நாளை சுருக்கினார். ஒரு நாள் வாசக சாலையில் படித்து விட்டு வீட்டிற்கு திரும்பினார். களைப்பாக கட்டிலில் படுத்தார். உடலும், மனசும் ஆசுவாசம் கொண்டது. ஈஸ்வரன் ஐயா மரணித்தார்.

அவர் வாழும்போது இறுதி காலத்தில் அவரை கண்டுகொள்ளாத அன்றைய அரசியல்வாதிகள் அவரின் மரணத்தில் பங்கெடுக்க நேரில் வந்தனர். ஆனால் ஐயாவின் மரணத்தில் அரசியல் ஆக்கக் கூடாது என்று வந்த அரசில்வாதிகளை திருப்பி அனுப்பினர் அவரது குடும்பத்தினர்.

ஈரோட்டு சுதந்திரத்தியாகிகளும், மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் திரண்டு ஈஸ்வரன் ஐயாவின் இறுதி ஊர்வலத்தை சிறப்பாக நடத்தினர். ஐயாவின் உடல் காவிரிக்கரையில் தகனம் செய்யப்பட்டது.

காவிரி நீரில் அவரது அஸ்தி கரைக்கப்பட்டது. எந்த நீர் வேண்டும் அவர் போராடினாரோ, அதே நீரில் அவர் ஆன்மா பயணித்தது.

காவிரிக்கரையில் அவர் நட்டு வைத்த மரக்கன்றுகள் வளர்ந்து விருட்சமாகி பல கிளைகளை விரித்தது போல ஈஸ்வரம் எனும் விருட்சம் பல ஆயிரம் கிளைகளை விரித்து, ஆல்போல் படர்ந்து மண் பயனுற்றதை இந்த நேரத்தில் நினைவு கூர்வோம்.

ஈஸ்வரன் ஐயா ஈரோட்டின் வரம். ஈரோட்டின் அறியப்படாத அடையாளமான ஈஸ்வரத்தை இப்போது ஈரோட்டில் கொண்டாடுகின்றனர்.

Next Story