ஈரோடு மஞ்சள் சிறப்பு செய்தி
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மஞ்சள் விளைந்தாலும், ஈரோடு மஞ்சளின் மகிமை, மருத்துவ குணம், நோய் எதிர்ப்பு சக்தி, தரம் உள்ளிட்ட தனித்தன்மை வேறு எந்த பகுதியில் விளையும் மஞ்சளுக்கும் இருப்பது இல்லை. இதற்கு முக்கிய காரணம் மண்ணின் தன்மையும், நீர் வளமும் தான். குறிப்பாக ஈரோடு மஞ்சளில் கர்குமின் என்ற வேதிப்பொருள் அளவானது உலக அளவில் வேறு எந்த பகுதியில் விளையும் மஞ்சளிலும் இருப்பதில்லை. இந்த வேதிப்பொருளானது இயற்கை மருத்துவத்திற்கு பெரிதும் உதவிகரமாக இருந்து வருகின்றது.
மஞ்சள் மாநகரமாக திகழும் ஈரோட்டில் 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடக்கிறது. பெருந்துறை, ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் ஆகிய இடங்களில் மஞ்சள் மார்க்கெட்டுகள் நடைபெறுகிறது.
ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை செய்யப்படும் மஞ்சளை விவசாயிகள் இந்த மார்க்கெட்டுகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கிறார்கள். அங்கு தரம் வாரியாக மஞ்சள் பிரிக்கப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. வியாபாரிகள் தங்களுக்கு தேவையான மஞ்சளை பார்வையிட்டு வாங்கி செல்கிறார்கள்.
பல்வேறு சிறப்புகளை கொண்ட ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கக்கோரி கடந்த 2011ம் ஆண்டு ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் உள்ள இந்திய புவிசார் குறியீடு பதிவகத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. மேலும் ஈரோடு மஞ்சளின் தன்மைகள், மண்ணின் தன்மை, மஞ்சள் விளையும் பகுதிகளின் எல்லை உள்ளிட்டகள் குறித்து ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து புவிசார் குறியீடு பதிவகம் இது தொடர்பாக பல்வேறு களஆய்வுகள், மருத்துவ ஆய்வறிக்கை உள்ளிட்டவைகளை மேற்கொண்டு வந்தன. மேலும் ஈரோடு மஞ்சளுக்கான புவிசார் குறியீடு வழங்குவதற்கான ஆட்சேபனை எதுவும் இல்லாததையடுத்து ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில், மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள வைகான் மஞ்சள், ஒடிசாவில் கந்தமால் மலை மஞ்சள் போன்றவற்றுக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழகத்தில் இது போல மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படவில்லை. தற்போது ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக மண் தன்மை, நீர் வளம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஈரோடு மஞ்சளுக்கு புவிசார்குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரோடு மாவட்டம் முழுவதும், அருகில் உள்ள திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் காங்கேயம், அன்னூர், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில் விளையும் மஞ்சள் மட்டுமே இனி ஈரோடு மஞ்சள் என்ற பெயர் பொருந்தும். ஈரோடு மஞ்சளை விதை மஞ்சளாக பிற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வாங்கிச்சென்று விதைத்தாலும் அது ஈரோடு மஞ்சளாக கருத முடியாது. ஏனெனில் மண்னை அடிப்படையாக கொண்டு தான் இந்த புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட மண்ணில் விளைந்தால் மட்டுமே ஈரோடு மஞ்சள் என்று கருதப்படும். ஈரோடு மண்ணின் தன்மை, செழிப்பு, தண்ணீர் வளம் ஆகியவற்றில் விளையும் மஞ்சளானது உயர்ந்த தரம் கொண்டதாகுவம், மருத்துவ குணம் கொண்டதாகவும் இருக்கும் என்பது நிருபிக்கப்பட்டதையடுத்து தான் ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரோடு மஞ்சள் உலக அளவில் அறியப்படும் என்பதோடு மற்ற மஞ்சளுடன் ஒப்பிடுகையில் நல்ல விலையும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு மஞ்சளுக்கு தனி மவுசு ஏற்பட்டது. அப்போது ஒரு குவிண்டால் ரூ.16 ஆயிரம் வரை விற்பனையானது. அதன்பிறகு மஞ்சளின் விலை படிப்படியாக குறைந்தது. மேலும், உரிய விலை கிடைக்காததால் அறுவடை செய்யப்பட்ட மஞ்சளை விவசாயிகள் விற்பனை செய்யாமல் குடோன்களில் பாதுகாத்து வந்தனர். கடந்த சில மாதங்களாக மஞ்சளின் விலை ஒரு குவிண்டாலுக்கு சுமார் ரூ.6 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்தநிலையில் கடந்த ஒரே மாதத்தில் மஞ்சள் ஒரு குவிண்டாலுக்கு சுமார் ரூ.2 ஆயிரம் விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது மஞ்சள் ஒரு குவிண்டால் ரூ.8 ஆயிரத்தை தாண்டியது.
மஞ்சள் ஏற்றுமதி அதிகரித்து வருவதால், தேவை அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 40 சதவீதம் ஏற்றுமதி அதிகமாகி உள்ளது. குறிப்பாக பங்களாதேசத்துக்கு மஞ்சள் ஏற்றுமதியாகிறது. மஞ்சளின் தேவை அதிகமாகி உள்ளதால், விலையும் உயர்ந்து உள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு மஞ்சள் ஒரு குவிண்டாலுக்கு ரூ.8 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதனால் ஏற்கனவே இருப்பு வைத்த மஞ்சளையும் விவசாயிகள் தற்போது விற்பனைக்காக கொண்டு வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu