கோவில் உண்டியலை தூக்கி சென்ற கொள்ளையர்கள்

ஈரோடு ரங்கம்பாளையத்தில் மாகாளியம்மன் கோவில் உண்டியலை கொள்ளையர்கள் தூக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு ரங்கம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே மாகாளியம்மன் கோவில் உள்ளது. அந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் இந்த கோவிலில் சென்று சாமியை வழிபட்டு வந்தனர். கோவில் வளாகத்தில் உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது. வழக்கம் போல் நேற்று இரவு பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று புத்தாண்டையொட்டி காலையில் சிறப்பு பூஜை செய்வதற்காக கோவிலை திறப்பதற்காக பூசாரி வந்தார். அப்போது கோவிலின் இரண்டு பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்த போது கோவில் வளாகத்தில் இருந்த சில்வர் உண்டியல் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கோயிலில் நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் பூட்டை உடைத்து உண்டியலை தூக்கி சென்றது தெரிய வந்தது. உண்டியலில் 1 லட்சம் ரூபாய் வரை பணம் இருக்கலாம் என கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக உண்டியல் திறக்கப்படாததால் எவ்வளவு பணம் இருக்கிறது என தெரியவில்லை.

இந்நிலையில் கோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட உண்டியல் அருகே உள்ள சடயம்பாளையம் பைபாஸ் ரோட்டில் உள்ள புதரில் கிடந்ததை தாலுகா போலீசார் கண்டுபிடித்தனர். உண்டியல் கிடந்த இடம் அருகே ஒரு பையில் சில பண நோட்டுகள் சிதறி கிடந்தது. உண்டியலையும் பணத்தையும் போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!