முககவசம் அரசு கொள்முதல் இழுத்தடிப்பு - உற்பத்தியாளர்கள் திண்டாட்டம்

ரேஷன் கடைகளில் விநியோகிக்க வேண்டி முககவசங்களை உற்பத்தியாளர்கள் முழு ஈடுபாட்டுடன் தயாரித்து வழங்கினர், ஆனால் அரசு முழுமையாக கொள்முதல் செய்யாமல் இழுத்தடிப்பதால் 5 கோடி முக கவசங்கள் தேக்கம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர் உட்பட பல்வேறு மாவட்ட உற்பத்தியாளர்கள், ஊழியர்கள் இதனால் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டது. இதில், நமது மாநிலத்தில் உள்ள 2.80 ரேஷன் கார்டுகளில் உறுப்பினர்களாக உள்ள 6.74 கோடி பேருக்கு துணியால் முக கவசம் தலா 2 வழங்கப்படும் என தமிழக கூட்டுறவுத்துறை மற்றும் உணவு வழங்கல் துறை அறிவித்தது. இதற்கான உற்பத்திக்கான ஆர்டர் பல்வேறு மாவட்டங்களில் அரசு மூலம் பெறப்பட்டு, முக கவசங்கள் உற்பத்தி செய்யப்பட்டது. இதில், உற்பத்தி செய்யப்பட்ட முககவசங்களை அரசு முழுமையாக கொள்முதல் செய்யாமலும், ஏற்கனவே கொள்முதல் செய்த முககவசத்துக்கு முழு தொகையை விடுவிக்காமல் இழுத்தடிப்படால், உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, ஈரோடு மாவட்டத்தில் முககவசம் உற்பத்தியில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:

ரேஷன்கார்டு உறுப்பினர்கள் 6.74 கோடி பேருக்கு, 13.48 கோடி முககவசமும், இதர பயன்பாட்டுக்காக ஒரு கோடி முககவசம் என 14.48 கோடி முககவசத்துக்கு, உற்பத்தியாளர்களுக்கு ஒப்பந்தம் வழங்கினர். இதில், 24 நிறுவனங்கள் டெண்டர் கோரி, 13 நிறுவனங்களின் டெண்டரை அரசு ஏற்றது. இதில், ஈரோடு, திருப்பூர், தாராபுரம், தர்மபுரி, சேலம், விருதுநகர் என பல்வேறு பகுதியில் ஆயத்த ஆடை தயாரிப்போர், மகளிர் தையல் குழுவினர், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா சீருடை தைத்து கொடுப்போரிடம் முக கவசம் உற்பத்தி செய்யும் பிரித்து வழங்கப்பட்டது. ஒரு முக கவசத்திற்கு ரூ.6.45 ஒப்புதல் செய்தனர். தைத்து கொடுப்போருக்கு துணி, நூல், குறைந்த பட்ச தொகை வழங்கினர். இளம்பச்சை, அடர் பச்சை, நீல நிற துணியை வெட்டி, தைத்து கொடுக்க, ஒரு முக கவசத்திற்கு ரூ.2 என கூலி நிர்ணயித்தனர். கடந்த அக்டோபர் மாதம் முதல் உற்பத்தி செய்யப்பட்ட முக கவசங்கள் பல்வேறு மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு ரேஷன் கடை மூலம் விநியோகம் செய்யப்பட்டது. இதற்கிடையில், தி.மு.க., உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் முக கவசம் உற்பத்தி பணியில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டினர். இதனால் டெண்டர் பெற்றவர்களுக்கு முதற்கட்டமாக ஒரு தொகையை அரசு வழங்கிய பின், மீதத்தொகையை தரவில்லை.

ரேஷன் கடைகளிலும் 40 முதல் 60 சதவீதம் பேருக்கு முககவசம் வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு வழங்குவதற்கான முககவசத்தை உற்பத்தி செய்து 5 கோடி முககவசம் தயாராக உள்ளது. டெண்டர்கள் எடுத்தவர்கள் உற்பத்தியாளர்களுக்கு பணம் தரவில்லை. தைத்து கொடுப்போர் பணம் கேட்பதால், உற்பத்தியாளர்களால் பதில் கூற முடியவில்லை. அரசு முழு பணத்தை விடுவித்ததும், உற்பத்திக்கான கூலியை மொத்தமாக வழங்கி தைத்து வைத்துள்ள முக கவசத்தை கொள்முதல் செய்து கொள்கிறோம் என டெண்டர்கள் எடுத்தவர்கள் கூறுகின்றனர். 5 கோடி முக கவசத்தை எப்போது எடுத்து, பணம் தருவார்கள் என தெரியவில்லை.

இந்த பணியில் 80 சதவீதம் பேர் பெண்களே ஈடுபட்டதால், அவர்களுக்கு கூலி கொடுக்க முடியாமல் தவிக்கிறோம். மேலும் தைத்து வைத்த 5 கோடிக்கும் மேற்பட்ட முக கவசத்தை அரசு கொள்முதல் செய்யாமல் போனால், தைத்து கொடுத்தவர்களுக்கு பல கோடி ரூபாயை எவ்வாறு வழங்குவது என தெரியாமல் பரிதவிக்கிறோம். இவ்வாறு முககவசம் உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil