ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க. எப்படி எதிர் கொள்ளும்?

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க. எப்படி எதிர் கொள்ளும்?
X

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியை காட்டும் வரைபடம்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க. எப்படி எதிர் கொள்ள போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈ.வெ.ரா. திருமகன் எம்.எல்.ஏ. மறைவால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.விற்கு விஷப்பரீட்சையாக மாறப்போகிறது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த ஈ.வெ.ரா. திருமகன் உடல் நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார். இளம் வயதில் அவர் மரணம் அடைந்த செய்தி அவர் சார்ந்துள்ள கட்சியினர் மட்டும் இன்றி அனைத்து தரப்பினரிடமும் ஒரு விதமான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈ.வெ.ரா. திருமகன்

காரணம் அவர் ஒரு சாதாரண சட்டமன்ற உறுப்பினர் மட்டும் அல்ல. பகுத்தறிவு தந்தை எனபோற்றப்படும் ஈ.வே.ரா. பெரியாரின் பேரன். முன்னாள் மத்திய மந்திரி மற்றும் முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் புதல்வர். ஒரு பாரம்பரிய மிக்க குடும்பத்தில் நான்காவது தலைமுறையின் முன்னணி அரசியல் பிரமுகராக இருந்தவர் என்பதால் தமிழகம் முழுவதும் இந்த செய்தி கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்திய காட்சி.

மறைந்த ஈ.வெ.ரா. திருமகன் உடலிற்கு தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றிருக்கிறார். அமைச்சர்கள் உள்பட இன்னும் பல முக்கிய பிரமுகர்களும் இறுதி அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அடைந்த வெற்றியின் மூலம் தி.மு.க. அடைந்த மாபெரும் வெற்றியினால் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சியில் அமர்ந்தது. தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் நடந்துள்ள முதல் சட்டமன்ற உறுப்பினரின் மரணம் என்றால் அது ஈ.வெ.ரா. திருமகனின் மரணம் தான். அது மட்டும் அல்ல 2023ம் ஆ்ண்டு உதயமான நான்காவது நாளே திருமகன் இந்த உலகை விட்டு மறைந்து விட்டார். இவரது மறைவால் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 18ல் இருந்து 17 ஆக குறைந்து உள்ளது.

ஈ.வெ.ரா. திருமகன் மறைவின் காரணமாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தற்போது காலியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மரணம் அடைந்நது விட்டதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்னும் சில மாதங்களில் இடைத்தேர்தல் வர உள்ளது. பொதுவாக ஒரு எம்.எல்.ஏ. இடம் காலியானால் 6 மாதங்களில் இடைத்தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பது மரபு. தமிழ்நாடு அரசுடன் ஆலோசனை செய்துவிட்டு, தேதி முடிவு செய்யப்படும். அந்த வகையில் ஜூன் மாதத்திற்குள் தற்போது காலியாக இருக்கும் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி எது என்பதை தேர்தல் ஆணையம் எம்.எல்.ஏ. சீட் காலியானதாக அறிவிக்கப்பட்டதும் தெரிவிக்கப்படும் என்றார்.

தலைமை தேர்தல் அதிகாரியின் இந்த பதிலின் மூலம் இனி தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான முதல் சட்டமன்ற இடைத்தேர்தல் பற்றிய பரபரப்பு அரசியல் கட்சிகளிடம் தொற்றிக் கொள்ளும்.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு இருந்ததால் ஈ.வெ.ரா. திருமகன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவரை எதிர்த்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் யுவராஜ் போட்டியிட்டார். சுமார் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் ஈ.வெ.ரா. திருமகன் வெற்றி பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தி.மு.க. இந்த தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதற்கு வாய்ப்பு உள்ளது.அதே நேரத்தில் அ.தி.மு.க. சார்பில் இந்த தொகுதி இன்றும் கூட்டணியில் தொடரும் த.மா.கா.விற்கு ஒதுக்கப்படுமா அல்லது அ.தி.மு.க.வே தனது கையில் எடுத்துக்கொண்டு வேட்பாளரை நிறுத்துமா என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது.

ஏனென்றால் தற்போது அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஏற்பட்ட பிரச்சனை சென்னை ஐகோர்ட்டில் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை சென்று விட்டது. அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்னும் இறுதி தீர்ப்பு வழங்கப்படவில்லை. ஆதலால் அ.தி‌.மு.க. வேட்பாளரை நிறுத்த முடியுமா அப்படியே நிறுத்தினாலும் அ.தி.மு‌.க. கட்சியின் இரட்டை இலை சின்னத்தை அவர்கள் நிறுத்தும் வேட்பாளருக்கு ஒதுக்கீடு செய்ய முடியுமா என அடுக்கடுக்காக கேள்வி கணைகள் எழுந்து கொண்டே இருக்கின்றன.

ஏற்கனவே அ.தி.மு.க.வில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பெரும்பான்மையினரும், ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் வேறு சிலரும் தனித்தனியாக இயங்கி வருகிறார்கள். அ.தி.மு.க. மீதான இவர்களது உரிமைப் போர் இப்போதைக்கு முடிவடைவதாக தெரியதில்லை. உச்சநீதிமன்றம் இம்மாத இறுதிக்குள் வழக்கை விசாரித்து ஒரு தீர்ப்பு அளித்து விட்டாலும் அடுத்த கட்டமாக கட்சியின் அங்கீகாரம், சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் சில முக்கிய முடிவுகளை அறிவிக்க வேண்டிய சூழல் ஏற்படும். அந்த பிரச்சனைகள் ஆறு மாதத்திற்குள் முடியுமா? இல்லை 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் வரை தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி- ஒ. பன்னீர் செல்வம்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு ,தேர்தல் ஆணையத்தின் முடிவு ஆகியவை எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக அமைந்து இரட்டை இலை சின்னம் அவருக்கே ஒதுக்கப்பட்டாலும் அவர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்தினாலும் பன்னீர்செல்வம் சுமார் இருக்க மாட்டார் அவர் ஏதாவது குழப்பம் செய்ய முயற்சிப்பார். இதன் காரணமாக அ.தி.மு.க. ஓட்டுக்கள் சிதற வாய்ப்பு உள்ளது. த.மா.கா.விற்கு ஒதுக்கினாலும் அ.தி.மு.க.வின் ஆதரவு ஒட்டுமொத்தமான ஆதரவு ஓட்டுக்கள் அப்படியே கிடைக்கக்கூடிய சூழல் இருக்காது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. பெறக்கூடிய வாக்குகள் அடிப்படையிலேயே பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வது தொடர்பாக அங்கீகாரம் அளிக்கும். இல்லையென்றால் அவர்கள் தங்களது தலைமையில் தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற ஒரு முடிவுக்கு வந்து அ.தி.மு.க.வை மிரட்ட தொடங்கி விடுவார்கள்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க.வின் பலத்தை நிரூபிப்பதற்கான ஒரு விஷப்பரீட்சையாக அமையப் போகிறது என்பதில் மட்டும் ஐயமில்லை.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!