ஈரோடு தொகுதி மதிமுக எம்பி கணேசமூர்த்தி காலமானார்

MP Ganesamurthy passed away- ஈரோடு தொகுதி மதிமுக எம்பி கணேசமூர்த்தி. (கோப்பு படம்)
- ஈரோடு தொகுதி மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்று, கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (28ம் தேதி) அதிகாலை உயிரிழந்தார்.
மதிமுகவைச் சேர்ந்த கணேசமூர்த்தி (வயது 77) , ஈரோடு தொகுதி எம்பியாக உள்ளார். இந்த முறை ஈரோடு தொகுதியை திமுக எடுத்துக் கொண்டது. இதனால் கணேசமூர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24) நண்பகல் அவரது வீட்டில் தென்னைக்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
இதனையடுத்து, உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், கோவையில், உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று (28ம் தேதி) அதிகாலை மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மதிமுக நிர்வாகிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கணேசமூர்த்தி எம்பி பற்றி சிறு குறிப்பு:-
அ. கணேசமூர்த்தி (10.06.1947) ஒரு தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். மறுமலர்ச்சி திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் அக்கட்சியின் பொருளாளராக பதவி வகிக்கிறார். 1978ல் திமுக மாணவரணி பொறுப்பில் இருந்த இவர் பின்னர் ஒருங்கிணைந்த பெரியார் (ஈரோடு) மாவட்ட திமுக செயலாளராக பொறுப்பு வகித்தார்.
1993ல் திமுகவிலிருந்து வைகோ வெளியேற்றப்பட்ட போது அவருக்கு ஆதரவு தெரிவித்து வெளியேறிய ஒன்பது மாவட்ட செயலாளர்களில் கணேசமூர்த்தியும் ஒருவர். மறுமலர்ச்சி திமுக தொடங்கியதிலிருந்து ஈரோடு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்த இவர் 2016 முதல் மறுமலர்ச்சி திமுக பொருளாளராக உள்ளார். இவர் 1998ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பழநி தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
பின்னர் 2009, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், ஈரோடு தொகுதியிலிருந்து ம.தி.மு.க சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், இவர் 2009 பொதுத் தேர்தலில் மதிமுக சார்பாக வென்ற ஒரே வேட்பாளரும் இவரே.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu

