ஈரோடு இடைத்தேர்தல்: தேர்தலுக்கு முந்தைய வெற்றிக்களிப்பில் பா.ஜ.க.
ஈரோடு இடைத்தேர்தலில் இறுதி வாக்காளர் பட்டியல், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை என அடுத்தடுத்து வர உள்ள பல கட்ட நடைமுறைகளுக்கு முன்பாகவே பாரதிய ஜனதா கட்சி அ.தி.மு.க. வின் இரு அணிகளையும்வென்று தேர்தலுக்கு முந்தைய வெற்றியை பெற்று உள்ளது.
இடைத்தேர்தல் களம்
ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க.,விற்கு கடும் போட்டியை கொடுக்க இ.பி.எஸ்., ஆதரவு நிலைப்பாட்டினை பா.ஜ.க எடுத்துள்ளது என்பது தற்போதைய அரசியல் கணிப்பாக உள்ளது. அதெல்லாம் இல்லை அரசியலில் எந்த நிமிடமும் எதுவும் மாறலாம். ஆனால் இந்த தேர்தலை பொறுத்தவரை எப்படியாவது ஓ.பி.எஸ்.,ஐ வைத்து ஈ.பி.எஸ்.,க்கு கடிவாளம் போட்டு விடலாம் என நினைத்த பா.ஜ.க, ஈரோடு தேர்தல் களம் அதற்கு சரியான இடமில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது. இங்கு தான் பா.ஜ.க தேர்தலுக்கு முந்தையை வெற்றியை பெற்றுள்ளது எனலாம்.
நிமிர்ந்து நின்ற இபிஎஸ்.
ஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வில் இவ்வளவு களேபரம் நடக்க காரணமே பா.ஜ.க. தான் என்பது அரசியல் அறிந்த அனைவருக்கும் தெரியும். இந்த இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை முடக்குவதன் மூலம் ஈ.பி.எஸ்.,க்கு செக் வைக்கவே பா.ஜ., முயற்சி செய்து வந்தது. ஆனால் இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. சுயேட்சை சின்னத்தில் நின்றாவது தொண்டர்கள் ஆதரவு எங்களுக்கு தான் உள்ளது என நிரூபிப்போம் என்று இ.பி.எஸ்., கங்கணம் கட்டிக் கொண்டு தேர்தல் களத்தில் நிமிர்ந்து நின்றார், இன்று வரை நிமிர்ந்தே நிற்கிறார். இந்த தேர்தலில் தனது பலத்தை நிரூபித்தே ஆக வேண்டும் என்பதில் இ.பி.எஸ். அணி வலுவாக ஒருங்கிணைந்து நின்றது.
பா.ஜ.க. நடத்திய நாடகம்
அதற்கு ஈடு கொடுக்கும் பலம் ஓ.பி.எஸ்.,க்கு இல்லை. அதாவது இடைத்தேர்தல் களத்தில் யார் வெற்றி பெற்றாலும், ஓ.பி.எஸ்., வேட்பாளரை விட பல ஆயிரம் அல்லது லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஓ.பி.எஸ்., வேட்பாளர் முன்னணி இடத்தை பிடிப்பார். ஓ.பி.எஸ்., வேட்பாளர் நான்கு இலக்க ஓட்டுக்களை கூட தொடுவாரா என்பதும் பெரிய சந்தேகம். களத்தின் நிலவரத்தை உளவுத்துறை மூலம் அறிந்த பா.ஜ., இப்போது ஓ.பி.எஸ்.,ஐ எதிர்த்து தேர்தல் களத்தில் ஈ.பி.எஸ்., தனது மக்கள் பலத்தை காட்டி விட்டால், அதன் பின்னர் அவரை படிய வைப்பது என்பது குதிரைக்கொம்புக்கு சமம் ஆகி விடும். எனவே அவரது உண்மையான பலம் என்ன என்பதை ஈ.பி.எஸ்., உணர்ந்து விடக்கூடாது. தொண்டர்களுக்கும், மக்களுக்கும் தெரிந்து விடக்கூடாது. ஓ.பி.எஸ்.,சின் பலகீனம் வெளிப்பட்டு விட்டால், அவர் மூலம் எதிர்காலத்தில் ஈ.பி.எஸ்.,க்கு செக் வைப்பதும் முடியாத காரியம் ஆகிவிடும். எனவே சுதாரித்துக் கொண்ட பா.ஜ., அவசரம் அவசரமாக ஏதோதோ வகையில் குழப்பங்களை ஏற்படுத்தி, ஈ.பி.எஸ்.,க்கு இரட்டை இலை கிடைக்க தேவையான ஏற்பாடுகளை செய்து விட்டது. இதற்காக பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் சி.டி. ரவியும், தமிழக தலைவர் அண்ணாமலையும் சமாதான பேச்சு வார்த்தை என்ற பெயரில் பெரிய நாடகத்தையே நடத்தி முடித்து விட்டனர்.
ஓ.பி.எஸ். எனும் மாய பிம்பம்
பா.ஜ.வின் அறிவுரையினை ஏற்று ஓ.பி.எஸ்.,சும் தனது வேட்பாளரை வாபஸ் பெற்றதோடு, இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் வேட்பாளருக்கே நாங்களும் வேலை செய்வோம் என அறிவிக்க ஏற்பாடு செய்து விட்டனர். இதன் மூலம் ஈ.பி.எஸ். அணி வேட்பாளராக இருந்தாலும், அவர் வாங்கிய ஓட்டுக்களுக்கு நாங்களும் ஒரு காரணம் என ஓ.பி.எஸ்.ஐ., அறிவிக்க வைத்து, ஓ.பி.எஸ்.,- இ.பி.எஸ்., பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரவிடாமல் தொடரச் செய்துள்ளது. இதன் மூலம் ஓ.பி.எஸ்.,க்கு அ.தி.மு.க., தொண்டர்களின் ஆதரவும் உள்ளது. மக்கள் பலமும் உள்ளது என்ற ஒரு மாய பிம்பத்தை பா.ஜ., நீடிக்க வைத்துள்ளது.
தேர்தலுக்கு முந்தைய வெற்றி
நிச்சயம் ஈரோடு தேர்தல் களத்தை ஈ.பி.எஸ்., அவ்வளவு சுலபமாக தி.மு.க.,விற்கு விட்டுக் கொடுத்து விடவே மாட்டார். கடைசி நொடி வரை ஓட்டுப்பதிவிலும், ஓட்டு எண்ணிக்கையிலும் போட்டி அனல் பறக்கும். இந்த கடும் போட்டிக்கு இரட்டை இலை தான் காரணம், அது இல்லா விட்டால் நீங்கள் பூஜ்யம் தான் என ஈ.பி.எஸ்.,க்கு மெசேஜ் சொல்லவே, இந்த முறை ஈ.பி.எஸ்.,க்கு இரட்டை இலையை கொடுத்து, அவரது தலைமையிலான அ.தி.மு.க., அணியின் உண்மையான மக்கள் பலத்தை கணக்கிட விடாமல் தடுத்து விட்டது. ஆக இப்போதைக்கு பா.ஜ., கட்சி அ.தி.மு.க.,வை ஒட்டவும் விடாது. வெட்டவும் விடாது. இந்த சூழலை சில மாதங்கள் நீடித்து கொண்டு சென்று லோக்சபா தேர்தலில் தனக்கு சாதகமாக சூழலை ஏற்படுத்த பா.ஜ., சூப்பராக பிளான் செய்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளது என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu