மின்மீட்டர்களை இனிமேல் தனியாரிடமே வாங்கலாம்..!
மின் மீட்டர் (கோப்பு படம்)
வீடுகளுக்கான மின் இணைப்புகளுக்கு மீட்டர் வைப்புத் தொகையாக, தரைக்கு அடியில் மின்சாரம் வழங்கும் இடங்களில் ஒரு முனை மின் இணைப்புக்கு 765 ரூபாய், மும்முனை மின் இணைப்புக்கு 2,045 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த தொகை கிராமங்களில் மாறுபடும்.
புதிதாக மின் இணைப்பு கேட்பவர்களுக்கு அவர்கள் விண்ணப்பித்த, 30 நாட்களுக்குள் இணைப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால் மின் மீட்டர் பற்றாக்குறை காரணமாக அதற்கு மேலும் அதிக நாட்கள் தாமதம் செய்யப்படுகிறது. இதனால் மின் இணைப்பு தேவைப்படுபவர்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதற்கு தீர்வு காணும் வகையில் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மீட்டர்களை, நுகர்வோர்களே வாங்க அனுமதி அளித்து, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதற்காக, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் தொடர்பான விவரங்களை அந்தந்த பகுதி மின்வாரிய அலுவலகத்தில் விளம்பரப்படுத்துமாறு மின்வாரியப் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில், 8.50 லட்சம் ஒரு முனை மீட்டர்கள் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தவிர, 20 லட்சம் மீட்டர்கள் வாங்க, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. தற்போது மீட்டருக்கு பற்றாக்குறை இருப்பதால், மின் இணைப்புக்கு விண்ணப்பிப்போர், தாங்களே தனியாரிடம் மீட்டர்கள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு முனை மீட்டரின் விலை 970 ரூபாய் மும்முனை மீட்டரின் விலை 2,610 ரூபாயாக உள்ளது. நுகர்வோர் மீட்டரை வாங்கியதும், அதை மின் வாரிய பிரிவு அலுவலகத்தில் வழங்க வேண்டும். வாரியம் சார்பில் அதை சோதித்து பின்னர் கொண்டு வந்து வீட்டில் பொருத்துவார்கள். அந்த நுகர்வோரிடம், மீட்டர் வைப்புத் தொகை வசூலிக்கப்படாது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu