இனியாவது திருந்துவார்களா கேரள இடதுசாரிகள்..?

இனியாவது திருந்துவார்களா  கேரள இடதுசாரிகள்..?
X

அன்வர்பாலசிங்கம்.

முல்லைப் பெரியாறு அணை மீது எப்போது கை வைப்பேன் என்று பினராயி உளறிக் கொட்டினாரோ, அன்றே அவருடைய தோல்வி தொடங்கி விட்டது.

தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க மாநில செயலாளர் ச.அன்வர்பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய சாகாவரம் பெற்ற மாமனிதர் பென்னிகுவிக்கின் ஆன்மா, கேரளத்து இடதுசாரிகளை ஆட்டி வைத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. காலங்காலமாக மார்க்சிஸ்ட் கோலோச்சி வந்த கண்ணூரிலும், காசர்கோட்டிலும் அவர்களுக்கு விழுந்த அடி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

முதல்வரின் சொந்தத் தொகுதியான தர்மடம், கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் தளிபரம்பா, மட்டனூர் உள்ளடங்கிய கண்ணூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான எம்.வி.ஜெயராஜன், காங்கிரஸ் தலைவர் வி.கே. சுதாகரனிடம் வீழ்ந்தது, யாரும் கற்பனையே செய்திட முடியாத ஒன்று.

கேரளத்து அரசியலையே புரட்டிப் போட்டு இருக்கும் இந்த மக்களவைத் தேர்தலில், யாரும் எதிர்பாராத வகையில், திருச்சூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சுரேஷ் கோபி, 74,727 வாக்குகள் வித்தியாசத்தில்,காங்கிரஸ் கட்சியின் கே. முரளிதரனை வீழ்த்தி, இடதுசாரிகளை மூன்றாவது இடத்திற்கு தள்ளியது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

ஆலத்தூர் மக்களவைத் தொகுதியில் மட்டும் மாநில அமைச்சரும் மார்க்சிஸ்ட் களின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கே ராதாகிருஷ்ணன் 20,111, வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது மட்டுமே கேரளத்து இடதுசாரிகளுக்கான ஒரே ஒரு ஆறுதல்.

மொத்தம் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளில், தான் போட்டியிட்ட 14 இடங்களில் 12 ஐ காங்கிரஸ் கை பற்றி இருக்கிறது. காங்கிரஸ் கூட்டணியிலிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தலா இரண்டு தொகுதிகளை வென்றிருக்கிறது. முறையே பொன்னானி தொகுதியில் மூத்த தலைவரான அப்துல் சமது சமதானியும், மலப்புரத்தில் ஈ.டி.முகமது பஷீரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

திருச்சூரில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி, திருவனந்தபுரத்தில் பெரிய முதலாளி சசி தரூருக்கு கடும் நெருக்கடியை கொடுத்ததோடு, வெறும் 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எளிமையான தலைவரான பன்னியன் ரவீந்திரன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது என் போன்றவர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது நிஜம்.

கேரளத்தில் தொடர்ந்து எட்டாவது முறையாக வெற்றி பெற்று நாடாளுமன்ற மக்களவைக்கு செல்லுகிறார் மாவேலிக்கரா தனித் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் கொடிக்குன்னில் சுரேஷ். வடகரா மக்களவைத் தொகுதியில் ஏழு முறை வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்ற உன்னிகிருஷ்ணனின் சாதனையை சுரேஷ் முறியடித்து இருக்கிறார்.

மார்க்சிஸ்ட்களின் கோட்டையான காசர்கோட்டில் காங்கிரஸ் கட்சியின் ராஜ்மோகன் உன்னித்தான் அபார வெற்றி பெற்றிருப்பது மார்க்சிஸ்ட்களை கலக்கமடைய வைத்திருக்கிறது.

ஆலப்புழா நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த முறை ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற ஆரிஃப். இந்த முறை காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் கே.சி. வேணுகோபாலிடம் வீழ்ந்தது யாரும் எதிர்பாராத ஒன்று. அதே தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவரான சோபா சுரேந்திரன் பெற்ற வாக்குகள் 3,11,779.

ஆட்டிங்கள் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அடூர் பிரகாஷ் தன்னை அடுத்து வந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் முரளியை வெறும் 684 வாக்குகள் வித்தியாசத்திலேயே வீழ்த்தி இருக்கிறார். இங்கு இரண்டாவது இடத்திற்கு வந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் பெற்ற வாக்குகள் மூன்று லட்சத்து 27,367. அதே தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி பெற்ற வாக்குகள் 3,11,779.

வடகரா நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அடுத்த முதல்வர் வேட்பாளரான, கே கே சைலஜா டீச்சர், காங்கிரஸ் கட்சியின் சாபி பரம்பிலிடம் வீழ்ந்தது அதிர்ச்சியான செய்தி. கோழிக்கோட்டில் எப்போதுமே இடதுசாரிகளின் ஆதிக்கம் உண்டு. இந்த முறை அதையும் அடித்து உடைத்து இருக்கிறது காங்கிரஸ் கட்சி. அக்கட்சியின் வேட்பாளர் எம் கே ராகவன், போகிற போக்கில் தொகுதியை தக்க வைத்திருக்கிறார்.

கேரள மாநிலத்தின் தலைநகரை திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளத்திற்கு மாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்த, காங்கிரஸ் கட்சியின் ஹைபி ஈடனின் வெற்றியும், சாலக்குடியில் காங்கிரஸ் கட்சியின் பென்னி பெகனனின் வெற்றியும், எதிர்பார்த்த ஒன்றுதான்.

கொல்லத்தில் எப்படியும் மண்ணை கவ்வி விடுவார் என்று நாங்களெல்லாம் ஆவலுடன் எதிர்பார்த்த ஆர். எஸ். பி கட்சியின் தலைவரான, எம்.கே. பிரேமச்சந்திரன்,,, கேரளத்தில் மக்கள் செல்வாக்கு பெற்ற கலைஞனான, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முகேஷை, ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 32 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அதிர்ச்சியிலும் அதிர்ச்சி.

மலையாள இனவெறி அமைப்பான ஹை ரேஞ்ச் சம்ரக்ஷ்ண சமிதியின் வேட்பாளராக இதற்கு முந்தைய முறை வெற்றி பெற்ற வழக்கறிஞர் ஜோயிஸ் ஜார்ஜ், கடந்த முறை காங்கிரஸ் கட்சியின் டீன் குரியா கோஸிடம் வீழ்ந்தார். ஆனால் இந்த முறை கவனமாக மார்க்சிஸ்ட் கட்சியோடு தன்னை இணைத்துக் கொண்ட ஜார்ஜ், கடந்த முறை தன்னை தோற்கடித்த குரியா கோஸிடம், ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 727 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்ந்திருக்கிறார்.

Decommission Mullaiperiyar Dam என்று அவ்வப்போது கிச்சுகிச்சு மூட்டும் அட்வகேட் ரசல் ஜோய், நோட்டாவிற்கு கீழே வந்து 4000 வாக்குகளோடு தான் ஒரு டம்மி என்பதை நிரூபித்து இருக்கிறார்.

வயநாட்டில் சிறுபிள்ளைத்தனமாக விளையாட்டு நடத்திய ராகுல்காந்தியும், ஆனிராஜாவும், ரசிக்கத்தகுந்த போட்டியாளர்கள் இல்லை. பத்தனம்திட்டா மக்களவைத் தொகுதியில் இரண்டு முறை கேரள மாநில நிதியமைச்சராக இருந்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தாமஸ் ஐசக், காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் எம் பி யான ஆண்டோ ஆன்டனி யிடம் வீழ்ந்தது பரிதாபகரமானது.

கேரள காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த கே.எம்.மாணியின் உற்ற நண்பரான தொடுபுழா சட்டமன்ற உறுப்பினர் பி.ஜே. ஜோசப்பின் கட்சியின் சார்பில் கோட்டயத்தில் களமிறங்கிய பிரான்சிஸ் ஜார்ஜ் மிக எளிதாக வெற்றி பெற்றது ஆச்சரியமான ஒன்று.

மார்க்சிஸ்ட்களின் கோட்டையான காசர்கோடு, கண்ணூர், வடகரா, பாலக்காடு உள்ளிட்ட மக்களவைத் தொகுதிகள் தகர்ந்தது அந்த கட்சியின் தொண்டர்களை சோர்வடையச் செய்திருக்க கூடும். கட்சியின் மூத்த தலைவர்களான கே.கே.சைலஜா டீச்சர், தாமஸ் ஐசக், விஜயராகவன், எளமரம் கரீம், எம்.வி.ஜாய் போன்றோர் காங்கிரஸ் கட்சியின் எளிய வேட்பாளர்களால் வீழ்த்தப்பட்டிருப்பது கவனத்தில் எடுத்துக் கொள்ளக் கூடிய ஒன்று.

கொரோனா காலத்தில் ஒட்டுமொத்த கேரள மக்களின் நன்மதிப்பைப் பெற்றவரும், பினராய்க்கு அடுத்து முதல்வராக வரக்கூடிய தகுதி படைத்தவருமான, கே.கே.சைலஜா டீச்சர், ஒரு எளியவனான ஷாபி பரம்பிலிடம் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்ந்தது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஒன்று.

தொடர்ந்து எட்டாண்டு காலம் கேரளத்தை ஆளும் இடதுசாரிகள், தங்கள் கடந்த கால நடவடிக்கைகளை திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியம் வந்திருப்பதாகவே நினைக்கிறேன். இன்னமும் இடுக்கி மாவட்டத்தில் தொடர்ந்து பிரச்னை செய்து வரும் உடும்பஞ்சோலை சட்டமன்ற உறுப்பினர் எம்.எம்.மணி போன்றவர்களை, கட்சி அடக்கி வைக்காவிட்டால்,மேற்கு வங்கத்திற்கு ஏற்பட்ட நிலை கேரளத்திலும் ஏற்படலாம்.

தொடர்ந்து 34 ஆண்டுகள் மேற்கு வங்கத்தை தக்க வைத்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடந்த முறையைப் போலவே, இந்த முறையும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட அங்கிருந்து தேர்வாகவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான SFI ன் தொடர் வன்முறை, அரசு நிர்வாகத்தில் மார்க்சிஸ்ட்களின் தொடர் தலையீடு, நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலை, தொடர்ந்து மார்க்சிஸ்ட் களுக்கு ஆதரவு அளித்து வந்த இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் தேசிய அளவில் ஒரு மாற்றம் வர வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் பக்கம் திரும்பியது, என பல காரணிகள் இருந்தாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரான எம்.வி. கோவிந்தன் மாஸ்டரின் செயல்பாடுகளும், முதல்வருடைய மகள் வீணா பெங்களூருவில் ஐ.டி.கம்பெனி நடத்தி வரும் விடயமும்,அது தொடர்பான சர்ச்சைகளும், கேரளத்தில் மார்க்சிஸ்ட்களுக்கு பெரும் பின்னடைவை கொடுத்திருக்க வேண்டும்.

கட்சி சுய பரிசோதனை செய்யும் காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது. இ எம் எஸ் நம்பூதிரிபாட், அச்சுதமேனன், எம் கே கோபாலன், இ கே நாயனார்,அச்சுதானந்தன் போன்றவர்கள் அரும்பாடு பட்டு வளர்த்த இடதுசாரிக் கோட்டைகள் எல்லாம் இன்றைக்கு தகர்ந்திருக்கிறது என்றால் அது கட்சியின் தற்போது செயல்பாடுகள் மட்டுமே என்பதோடு கூடுதலாக கர்னல் பென்னிகுயிக்கின் ஆன்மாவும் அதனுடன் இணைந்திருக்கிறது என்று கூறி முடிக்கிறேன். வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்று, தற்போது ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய இருக்கும் ராகுல் காந்திக்கு என்னுடைய கண்டனங்கள். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!