தமிழக பள்ளிகளில் மாணவர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு நடத்த உத்தரவு

தமிழக பள்ளிகளில் மாணவர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு நடத்த உத்தரவு
X

பள்ளி கல்வித்துறை அலுவலகம் - கோப்புப்படம் 

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட அரசு பள்ளியின் தலைமையாசிரியர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையும், இதன் பின்னணியும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. என்ன செய்தார் அவர்? பார்க்கலாம் விரிவாக...

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியரால் அரங்கேற்றப்பட்டிருக்கும் மோசடிகளும், முறைகேடுகளும் தமிழக கல்வித்துறையை ஆட்டம் காணச் செய்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம், பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தலைமை ஆசிரியரான லதா, மாணவர்களின் வருகை பதிவேட்டை திருத்தம் செய்து 230 மாணவர்கள் படிக்க கூடிய பள்ளியில், 550 மாணவர்கள் படிப்பதாக கணக்கு காட்டியிருக்கிறார். இதற்கு ஏற்றார் போல கூடுதல் ஆசிரியர்களை பெற்று, ஆசிரியர் அல்லாத பணியிடங்களை அவர் நிரப்பியதும் அம்பலமாகி உள்ளது.

இதோடு இல்லாமல், 220 மாணவர்கள் பெயரில் பள்ளிக் கல்வித் துறையின் பல்வேறு விலையில்லாத திட்டங்களையும், சத்துணவு பொருட்களையும் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இதனால், அரசுக்கு மிகப்பெரும் நிதி இழப்பு ஏற்பட்டிருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த பலே மோசடியும், முறைகேடும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்திருப்பதை கண்டு அதிர்ந்து போன தொடக்கக்கல்வி இயக்குனர் நரேஷ் , இதனை முறையாக ஆய்வு செய்து கண்டுபிடிக்காத வட்டார கல்வி அலுவலர் மேரி ஜோசப்பை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார். தொடர்ந்து, தலைமையாசிரியர் லதா மீதும் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை பாய்ந்திருக்கிறது.

இந்நிலையில், இதன் எதிரொலியாய் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் வருகை பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்க்க கல்வித் துறை முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!