இந்தியாவிலேயே எம்.எல்.ஏ.,வான முதல் நடிகர் யார் தெரியுமா?
நடிகர் திலகமே சொன்னார்," நான் இரண்டாவது ஆள் தான் முதல் ஆள் அவர் தான்" என்று... அந்த அவர் வேறு யாருமல்ல, சேடப்பட்டி சூரிய நாராயணன் ராஜேந்திரன் என்ற எஸ்எஸ்ஆர்.
சிவந்த தேகம், நல்ல உயரம் அருமையான குரல் வளம் என, ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் எஸ் எஸ்ஆருக்கு. 1940-களில் சினிமா வாய்ப்புக்காக போராடிய எஸ்எஸ்ஸாருக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் கொலை வழக்கில் கைதாகி இருந்தபோது, அவரை மீட்க நிதி திரட்டுவதற்காக பைத்தியக்காரன் (1947) என்று ஒரு படம் தயாரிக்கப்பட்டது. கலைவாணரின் துணைவி டி ஏ மதுரம் இரட்டை வேடங்களில் நடித்தார். ஒரு பாத்திரத்திற்கு எம்ஜிஆர் ஜோடி. இந்தப் படத்தில் சின்ன வேடம் எஸ்எஸ்ஆர்க்கு கிடைத்தது.
1948ல் அபிமன்யு படம். உயிர் நண்பராக இருந்த எம்ஜிஆரின் சிபாரிசு பேரில் அபிமன்யுவாக நடிக்க வாய்ப்பும், ஆயிரம் ரூபாய் அட்வான்சும் கிடைத்தது. ஆனால் எஸ்எஸ்ஆர் நடித்துக் கொண்டிருந்த நாடக சபா, சினிமாவில் நடிக்க காண்ட்ராக்ட்டிலிருந்து விடுக்க முடியாது என வழக்குபோட்டதால், ஜூபிடர் நிறுவனத்தின் பட வாய்ப்பு பறிபோனது.
அதே வருஷம், சேலம் மூர்த்தி பிலிம்ஸ் தயாரித்த ஸ்ரீஆண்டாள் படத்தில் வில்லன் ரோல். ஆனால் படத்தை மேற்பார்வையிட்ட மாடர்ன் தியேட்டர் சுந்தரம், தம்மாதுண்டு பையனா இருக்கான் என அதிருப்தியை தெரிவிக்க, உடனே படத்திலிருந்து எஸ்எஸ்ஆர் வெளியே வாரி போடப்பட்டார்.
நல்ல குரல்வளம் பெற்றிருந்ததால் பின்னணி பாடகராகி முன்னுக்கு வரலாம் என்று பார்த்தால், ஒரே பாடலோடு அதுவும் குளோஸ்.... நொந்துபோன நிலையில் 1951-ல் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்து இயக்கிய ‘மணமகள்’ படத்தில் கிடைத்தது ஒரு பிச்சைக்காரன் வேடம். கலைஞரின் அனல்பறக்கும் வசனத்தில் புகுந்து விளையாடினார் எஸ்எஸ்ஆர்.
விதி இங்கே சென்சார்போர்டு வடிவத்தில் வந்தது. திராவிட ஆட்களுக்கும் சென்சாருக்கும் ஏழாம் பொருத்தம். எஸ்எஸ்ஆரின் பிச்சைக்காரன் வசனங்கள் அபாயகரமாகவும், புரட்சிகரமாகவும் உள்ளன என்று, அவர் நடித்த போர்ஷன்களையே ஸ்வாகா செய்து விட்டது சென்சார் போர்டு.
கடைசியில் ‘பராசக்தி’ படம்தான் எஸ்எஸ்ஆர்க்கு திருப்புமுனை படமாக அமைந்தது. மூன்று சகோரதரர்களில் ஒருவர் என முக்கிய வேடம். ‘பராசக்தி’ வெற்றியை தொடர்ந்தும் எஸ்எஸ்ஆர்க்கு சோதனை தான். பணம், மனோகரா, ரத்தக்கண்ணீர் என்ற மற்ற கதாநாயகன்களின் படங்களிலேயே அவர் இரண்டாம் ஹீரோகவாக பயணிக்க நேர்ந்தது.
ஒரு வழியாய் ஏவிஎம் புண்ணியத்தில், முரசொலிமாறன் வசனம் எழுதிய ‘குலதெய்வம்’ படத்தில் கதாநாயகன் அந்தஸ்தை எட்டிப்பிடித்தார். படம் பெரிய அளவில் வெற்றி. அடுத்து முக்தா சீனுவாசன் இயக்கிய, முதலாளி (1957) படம்.. "ஏரிக்கரையின்மேல போறவளே பெண் மயிலே" என்ற பாடல்.
தேவிகாவை பின்தொடர்ந்து சென்று சைட் அடித்தபடி எஸ் எஸ் ஆர் கேரக்டர் பாடும். டிஎம்எஸ் குரலில் கணீரென அந்த பாடல் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்க, படம் மெகா ஹிட். 1959ல் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்கு நிகராக மருது சகோதரர்கள் வரலாற்றை மையமாக வைத்து சிவகங்கைச்சீமை என்ற படத்தை தயாரித்தார் கவிஞர் கண்ணதாசன்.
அருமையான பாடல்களோடு கண்ணதாசனின் வசனங்கள் எஸ்எஸ்ஆரின் வாயிலிருந்து அனலாக பறந்தன. எஸ்எஸ்ஆர் வாழ்க்கையில் மைல் கல்லாக பார்க்கப்பட்ட அந்த சிவகங்கை சீமை படம், ஏனோ எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
இப்படிப்பட்ட சூழலில் எஸ்எஸ்ஆர் இன்னும் ஒரு தவறான காரியத்தை செய்தார். தெளிவில்லாத, சுவாரஸ்யமில்லாத கதைகளில் தொடர்ந்து நடிக்க எஸ்எஸ்ஆரின் பல படங்கள் காணாமல் போய் விட்டன. குமுதம், சாரதா, நானும் ஒரு பெண் போன்ற படங்கள் மட்டும் அவ்வப்போது வெற்றி பெற்று ஆறுதலைத் தந்தன. எஸ்எஸ்ஆர் கதாநாயகனாக நடித்த பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் விஜயகுமாரி. இருவருக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட அது காதல் திருமணத்தின் போது முடிந்தது.
தொடர்ந்து களத்தில் இருப்பதற்காக ராஜாதேசிங்கு, ஆலயமணி, காஞ்சித்தலைவன் என எம்ஜிஆர் சிவாஜி படங்களில் இரண்டாம் ஹீரோவாக பாதுகாப்புடன் செல்லவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார் எஸ்எஸ்ஆர்.
பெரும்பாலும் சிவாஜி படங்களில் சகோதரனாக, மைத்துனராக, நண்பனாக வருவார் எஸ்எஸ்ஆர். பச்சை விளக்கு, சாந்தி, பழனி, கை கொடுத்த தெய்வம் என, அது ஒரு பெரிய பட்டியல். ஐந்து படங்களில் இரண்டாவது ஹீரோ என்றால் ஒரு படம் ஹீரோவாக வெளிவரும். அவன் பித்தனா, மறக்க முடியுமா? பூம்புகார் போன்ற படங்களை இவ்வரிசையில் சேர்க்கலாம்.
கலைஞரின் வசனத்தில் ஜெயலலிதா நடித்த ஒரே படம், மணிமகுடம். இந்த படத்தின் கதாநாயகன் எஸ்எஸ்ஆர் தான். 1960-களின் இறுதியில் எஸ்எஸ்ஆர் மெல்ல மெல்ல சினிமா வாழ்க்கையில் கரைந்து போனார்.
கே.பாலச்சந்தர் - சிவாஜி கூட்டணியில் முதன் முறையாக உருவாகி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம், எதிரொலி (1970). படத்தில் எஸ் எஸ் ஆரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். படம் படு ஃபிளாப்.
இந்த படத்தோடு ஒதுங்கிவிட்ட எஸ்எஸ்ஆர், எண்பதுகளில் தான் மீண்டும் சினிமா பக்கம் எட்டிப்பார்த்தார். இரட்டை மனிதன் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதுவும் ஓடவில்லை.. அதன்பின் சில படங்களில் கௌரவவேடம் அவ்வளவே.. சினிமாவில் இப்படி தத்தளித்த எஸ்எஸ்ஆர், ஆரம்பகால அரசியல் வாழ்வில் நன்றாகவே முன்னேறினார்.
எம்ஜிஆர், திமுகவுக்கு வருவதற்கு முன்பாக அண்ணாவின் திரைத் தளபதிகளாக கோலேச்சியவர்கள் பட்டியலில் கே.ஆர். ராமசாமி, சிவாஜி, டிவி நாராயண சுவாமி, வளையாபதி முத்துகிருஷ்ணன், சகஸ்ரநாமம் போன்றோருடன், எஸ்எஸ்ஆரும் இருந்தார்.
அற்புதமான மேடைப்பேச்சால் திமுக மேடைகளை அலங்கரிக்கவும் செய்தார். தென்மாவட்டங்களில் திமுவுக்கு வலிமை சேர்க்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்ததால், கட்சி 1957ல் சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலிலேயே எஸ்எஸ்ஆர்க்கு சீட் வழங்கினார் பேரறிஞர் அண்ணா.
அந்தத் தேர்தலில் திமுகவுக்கு 15 இடங்கள் கிடைத்தன. ஆனால் துரதிஷ்டவசமாக எஸ் எஸ் ஆர் வெற்றியை இழந்தார். இருந்தாலும் 1962 தேர்தலில் மீண்டும் எஸ் எஸ் ஆர் க்கு திமுக வாய்ப்பை வழங்கியது. இந்த முறை திமுக 50 இடங்களை கைப்பற்றியது. தேனி தொகுதியில் வென்று, இந்திய வரலாற்றிலேயே சட்டசபைக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் நடிகர் என்ற சாதனையை படைத்தார் எஸ்எஸ்ஆர்.
எம்ஜிஆர் முதலில் சட்டசபைக்கு எம்எல்சியாகத்தான் நுழைந்தார் 1967-ல் தான் பரங்கிமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கொள்கை நிலைப்பாடு என்று வந்து விட்டால் எதையும் செய்ய தயங்காதவர் எஸ் எஸ் ஆர்.
1964ல் அன்று சுதந்திர தினம்.. சென்னை எல்டாம்ஸ் ரோட்டில் தன் வீட்டில் கருப்புக்கொடி ஏற்றி திராவிட இயக்க கோஷம் போட்டார். போலீஸ் பட்டாளம் முற்றுகையிட்டது. கையில் ரிவால்வருடன் மொட்டை மாடியில் ஏறியவர், ‘என் வீட்டில் நான் எது வேண்டுமானாலும் செய்வேன். அதை கேட்க நீங்கள் யார்?’ என்று ஓங்கிச்சொல்லி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர்..
ராஜ்யசபா எம்பி, தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் சட்டமன்ற தேர்தலில் ஜெயித்து சாதனை படைத்த அதிமுக வேட்பாளர் என பல பெருமைகள் எஸ்எஸ்ஆர்க்கு உண்டு.
ஆனால் அரசியலுக்கே உண்டான முன்னிலைப் படுத்திக்கொள்ளுதல் போன்ற சாதூர்யமான குணங்கள் இல்லாமல் வெள்ளந்தியாக இருந்தது, எஸ்எஸ்ஆரை பின் தங்க வைத்து விட்டது.
சினிமாவிலும் அரசியலிலும் சரியாக செயல்பட்டிருந்தால் எம்ஜிஆர் வந்த இடத்திற்கு எஸ்எஸ்ஆர்தான் வந்திருப்பார். ஒருவேளை, பராசக்தி படத்தில் எஸ்எஸ்ஆர் கதாநாயக னாக இருந்து கருணாநிதியின் வசனங்களை சிவாஜியை விட சிறப்பாக பேசி படம் வெளி வந்திருந்தால்.. விதியின் வியப்பான விளையாட்டு எப்படி இருந்திருக்குமோ? புராண படங்களில் நடிப்பதை தவிர்த்ததால் லட்சிய நடிகர் என்று பட்டம் பெற்ற எஸ்எஸ்ஆர் என்ற மூன்றெழுத்தை, சினிமாவில் சிவாஜி என்ற மூன்றெழுத்தும் அரசியலில் எம்ஜஆர் மூன்றெழுத்தும் முன்னேறவிடாமல் செய்து விட்டன என்பதை மறுப்பதற்கில்லை.
அறிஞர் அண்ணா மீது அளவுகடந்த அன்பை வைத்திருந்தவர் எஸ்எஸ்ஆர். அண்ணாவைத் தவிர வேறு யாரும் தனக்கு தலைவர் இல்லை என்று சொல்லி வந்தவர். திமுகவில் இருந்து அதிமுகவுக்கு வந்து எம்எல்ஏவாகி அமைச்சர் வாய்ப்பை எம்ஜிஆர் தந்தபோது மறுத்து விட்டவர். எம்ஜிஆர் மறைந்து அதிமுக ஜானகி அணி ஜெயா அணி என இரு அணிகளாக பிரிந்த போது அதில் ஜெயலலிதா பக்கம் நின்று பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாமல் போனவர். 86 ஆவது வயதில் மறைந்தார் நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu