காவல்துறையை களங்கப்படுத்த வேண்டாம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காவல்துறையை களங்கப்படுத்த வேண்டாம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
X
கொடுங்குற்றங்கள், கூலிப்படைகள் விஷயத்தில் ஈவு இரக்கமின்றி இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது -முதலமைச்சர் ஸ்டாலின்.

சில சம்பவங்களை வைத்து ஒட்டுமொத்தக் காவல்துறையையும் யாரும் களங்கப்படுத்த வேண்டாம். இது உயிரைப் பணயம் வைத்துப் பாடுபடக்கூடிய காவலர்களைக் கொச்சைப்படுத்தும் செயல் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டமன்றப் பேரவையில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டபேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து பேசியதாவது:

போதைப் பொருட்களுக்கு நமது மாணவச் செல்வங்கள் அடிமையாவது மிக மிக கவலையளிக்கிறது. ஆகவே குட்கா விற்பனையைத் தடுத்து நிறுத்துங்கள்; போதைப் பொருட்கள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்கள். போதையில் இருந்து இளைய சமுதாயத்தைக் காப்பது இன்றைய சூழலில் மிக முக்கியமானதாக நினைக்கிறேன். எந்த போதை மருந்து நடமாட்டமும் தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது.

கூலிப்படை வைத்துக் கொலை செய்த வழக்குகளை, விசாரணையை விரைந்து முடித்து, கூலிப்படைகளுக்கே முற்றுப்புள்ளி வையுங்கள். கூலிப்படை வைத்திருப்பதைத் தொழிலாகக் கொண்டவர்கள் முழுமையாகத் துடைத்தெறியப்பட வேண்டும்.

தீயணைப்புத் துறையினர் ஆபத்தான கட்டிடங்களை ஆய்வு செய்து பாதுகாப்பினை உறுதி செய்யுங்கள். தீ விபத்துக்களை விரைந்து சென்று தடுத்திடவும் முன்கூட்டியே நடைபெறாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊர்க்காவல் படையினரை அதிகம் பயன்படுத்துங்கள்; சமூக நல்லிணக்கப் பணிகளுக்கு அது மிக முக்கியமாக இருக்கிறது. மத துவேஷங்கள், தீவிரவாதச் செயல்களை முளையிலேயே கிள்ளி எறியுங்கள். மதம், சாதி வன்முறையைத் தூண்டும் பேச்சுகள் தடுக்கப்பட வேண்டும். இப்போது இந்த வன்முறைப் பேச்சுக்கள் இணையதளங்களில் அதிகமாகப் பரவி வருகிறது. இம்மாதிரியான ஆட்கள் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

கள்ளச்சாராயச் சாவுகள் இல்லாத தமிழகமாக மாறிட வேண்டும்; அதை உறுதிப்படுத்துங்கள். அமைதி அது ஒன்றே உங்களது குறிக்கோள் என்று தமிழ்நாடு காவல்துறைக்கு நான் கட்டளையிட்டிருக்கிறேன். அப்படித்தான் தமிழ்நாடு காவல் துறையும் செயல்பட்டு வருகிறது. அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்த சில சம்பவங்களை வைத்து ஒட்டுமொத்தக் காவல்துறையையும் யாரும் களங்கப்படுத்த வேண்டாம். இது உயிரைப் பணயம் வைத்துப் பாடுபடக்கூடிய காவலர்களைக் கொச்சைப்படுத்தும் செயல் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்துறையை மேம்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்காகத்தான் காவல் துறை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.டி. செல்வம் அவர்கள் தலைமையில் இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. கழக அரசால் அமைக்கப்பட்ட நான்காவது காவல் ஆணையம் இது. அதிலிருந்தே காவல் துறைமீதும், காவலர்கள் மீதும் கழக அரசு எத்தகைய அக்கறையுடன் இருக்கிறது என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள். ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் உள்துறையின் முதல் மானியக் கோரிக்கையை தாக்கல் செய்து இந்த மாமன்றத்தில் நான் ஆற்றிய உரையிலே, ஐந்து முக்கிய அம்சங்களை முன்வைத்தேன்.

அவை மக்களுடைய பாதுகாப்பு தொடர்புடையவை - மக்களுக்கு காவல்துறை மீது தனி நம்பிக்கையை ஏற்படுத்த அறிவிக்கப்பட்டவை. அந்த ஐந்து அம்சங்கள் என்னவென்றால்,

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு இந்த அரசு முன்னுரிமை அளிக்கும்.

சட்டம்-ஒழுங்கைத் திறம்படப் பராமரிப்பதை உறுதிசெய்வதற்கு, குற்றங்களைத் தடுப்பதற்கு முன்னுரிமை கொடுக்கும்.

காவல் துறைக்கும் மக்களுக்கும் இடையிலான நல்லுறவே காவல் பணியில் இன்றியமையாத குறிக்கோள் என்பதை முன்னிறுத்தும்.

காவலர் குறைதீர்க்கும் செயல்முறைகள் வலுப்படுத்தப்படும்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், இணையவழிக் குற்றங்கள் புலன் விசாரணையில் முன்னுரிமை கொடுக்கப்படும்.

இந்த அடிப்படை அம்சங்களைக் கடந்த ஓராண்டில் மிக நேர்த்தியாக கடைப்பிடித்து, சட்டம்-ஒழுங்கை இன்றைக்கு மிகச் சிறப்பாக நிலைநாட்டி வருகிறது இந்த ஆட்சி என்பதை நான் மகிழ்ச்சியோடு, பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அரசினுடைய நோக்கம் குற்றங்களைத் தடுப்பது. அந்த நடவடிக்கை ஒன்றே, மக்களுக்குக் காவல்துறை மீது நம்பிக்கையைப் பெற்றுத்தரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருப்பவன் நான்.

அதனால்தான் இன்றைக்கு இந்த ஓராண்டு காலத்தில் மக்களுக்குக் காவல்துறை மீதான நம்பிக்கையை மீட்டெடுத்திருக்கிறோம். 'இது நம்ம போலீஸ்' என்ற உணர்வை, பட்டி தொட்டிகளில் உள்ள மக்களிடம் உருவாக்கியுள்ளோம். 'காவல்துறை நமது நண்பன்' என்ற உணர்வை ஒவ்வொருவரிடமும் ஊட்டியிருக்கிறோம். மக்களுக்கும், காவல் துறைக்கும் நல்ல நட்பு இருப்பதால், குற்றங்கள் முன்கூட்டியே தடுக்கப்பட்டுள்ளன. அதனை மீறிக் குற்றங்கள் நடந்தாலும், அதற்குக் காரணமானவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்ட பிறகு, அதைச் சமாளிப்பதைவிட முன்பே அப்படியொரு பிரச்சினை ஏற்படாமல் தடுப்பதே காவல் துறையினுடைய சிறந்த பணி என நம்புபவன் நான். அதனால்தான் குற்றங்களைத் தடுக்க முன்னுரிமை என்று அறிவித்து, அதைச் செயல்படுத்தி இருக்கிறோம். தொடர்ச்சியான ஆய்வுக் கூட்டங்கள் மூலமாகத்தான் குற்றங்களைத் தடுக்க முடியும்.

அந்த வகையில், 761 ஆய்வுக் கூட்டங்களை எஸ்.பி.-க்கள் மாவட்ட அளவில் நடத்தி, இதுகுறித்த ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்கள். சரக அளவிலே 470 கூட்டங்கள் நடத்தி டி.ஐ.ஜி.-க்கள் இதுகுறித்த ஆலோசனைகளை அளித்துள்ளார்கள். மாநகரங்களில் 60 கூட்டங்களைக் காவல் துறை ஆணையர்களும், மண்டல அளவில் 134 ஆய்வுக் கூட்டங்களை ஐ.ஜி.-க்களும், மாநில அளவில் டி.ஜி.பி. உள்ளிட்ட உயரதிகாரிகளும் இதுபோன்ற ஆய்வு கூட்டங்களை நடத்தி, "குற்றத் தடுப்பு" முன்னுரிமை குறித்து அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்கள். இத்துறையின் அமைச்சர் என்ற முறையில்நான் காவல் துறை உயரதிகாரிகளைக் கடந்த 6-5-2022 அன்று அழைத்து பேசி ஆலோசனை வழங்கியிருக்கிறேன்.

மார்ச் 10 முதல் 12 வரை என் தலைமையிலே நடைபெற்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இதுகுறித்த ஆலோசனைகளை வழங்கியிருக்கிறேன். அந்தக் கூட்டத்தில் திறந்த மனதோடு அதிகாரிகள் பங்கெடுத்துப் பல்வேறு கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள். அதனை மனதில் வைத்துப் பல்வேறு திட்டங்களை அரசும் தீட்டி உள்ளது. "குற்றங்களைத் தடுப்போம் - தவிர்ப்போம்!" என்பதே இந்த அரசின் முழக்கமாக அமைந்திருக்கிறது.

தொழிற்சாலைப் பகுதிகளில் குற்றங்களைத் தடுக்கத் தனி போலீஸ் படை உருவாக்கப்பட்டது. 3 ஆயிரத்து 632 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு, அவர்கள் "முழுக் காலத்திற்கு" முன்பே வெளியில் செல்வது பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 483 பேர் முழுக் காலமும் அனுபவிக்காமல், மிக விரைவிலேயே வெளியே வந்த அவல நிலை அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தது. ஆனால், அந்த நிலை மாற்றப்பட்டு அப்படி வெளிவரும் எண்ணிக்கையையும் இந்த அரசு குறைத்திருக்கிறது. குற்றத் தடுப்பிற்கு இது ஒரு வகை. இப்படி அரசு எடுத்த நடவடிக்கைகள் மூலமாக இந்த "Preventive Policing" முன்னுரிமையால், இந்த அரசு பொறுப்பேற்ற ஓராண்டுக் காலத்தில் திருட்டு வழக்குகளில், 53 விழுக்காடு வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 144 கோடியே 3 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 43 விழுக்காடு சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. உளவுத் துறை, மாவட்டத் தனிப் பிரிவு, மாநகர நுண்ணறிவுப் பிரிவு, உள்ளூர் காவல் துறையினர் அளித்த முன்னெச்சரிக்கை தகவலின் அடிப்படையில், கடந்த ஓராண்டில் 268 கொலைகள் நடைபெறாமல் காவல் துறையினர் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.

இதுவரை நடைபெற்ற 185-க்கும் மேற்பட்ட முக்கிய விழாக்களில் பங்கேற்ற 1 கோடியே 8 இலட்சம் பேரின் பாதுகாப்பினை இந்த அரசு உறுதிசெய்து, அவர்கள் திருவிழாக்களைக் கண்டு களித்துவிட்டு பாதுகாப்பாக வீடு திரும்ப வித்திடப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு சில முக்கிய நிகழ்வுகளை இங்கே சுட்டிக்காட்ட வேண்டுமென்றால், மருதுபாண்டியர் ஜெயந்தி விழா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை, இமானுவேல் சேகரன் நினைவு தினம், விநாயகர் சதுர்த்தி விழா, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள், ரம்ஜான் போன்ற நிகழ்வுகளின்போது இந்த ஆட்சி மிகச் சிறப்பாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து, சமூக நல்லிணக்கத்தை, சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டியிருக்கிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் போன்றவற்றை அமைதியாக நடத்தி, சென்னை உயர்நீதிமன்றத்தினுடைய பாராட்டைப் பெற்றிருக்கிறது.

இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவர்கள் உள்ளிட்ட 12 பேர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான வேதனைக்குரிய நிகழ்வு நடைபெற்றது. அந்தத் துயரமான நிகழ்வில் நான் உட்பட தமிழகம் முன்னணியில் நின்று களப்பணியாற்றியதை நம் நாடே போற்றியது. நம் இராணுவ அதிகாரிகளே பாராட்டியிருக்கிறார்கள்.

திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி தொழிற்சாலை தொடர்பாக ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்திற்கு அமைதி வழியில் ஆக்கப்பூர்வமான தீர்வு கண்டதை அண்டை மாநிலங்களில் தொழிற்சாலை வைத்திருப்போர்கூட பாராட்டினார்கள்.

இப்படி பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் தமிழ்நாடு காவல் துறை இந்த அரசின்கீழ், எனது தலைமையின்கீழ் மிகவும் திறமையாகச் செயல்பட்டுள்ளது என்பதைப் பெருமையுடன் இந்த அவையிலே நான் பதிவு செய்ய விரும்புகிறேன். கொடுங்குற்றங்கள் தொடர்பாகவும் கூலிப்படைகள் விஷயத்திலும் ஈவு இரக்கமின்றி இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil