மக்கள் போட்ட மதிப்பெண்ணால் உள்ளாட்சியிலும் மலர்ந்தது தி.மு.க. ஆட்சி
தமிழகத்தில் மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவு இந்நேரம் வரை கிட்டத்தட்ட 90 சதவீதம் வெளியிடப்பட்டு விட்டது. மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் மிகப் பெரும்பான்மையான வெற்றியை அடைந்துள்ளனர். எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தோல்வியை தழுவி உள்ளது. இந்த தேர்தலைப் பொறுத்தவரை தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தொடங்கி குமரி முனை வரை பார்த்தால் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் தேர்தலை சந்தித்தன .
இதில் 21 மாநகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியுள்ளது. அதேபோல் ஒரு சில நகராட்சிகளை தவிர மீதமுள்ள அனைத்து நகராட்சிகளிலும் தி.மு.க. வெற்றி வாகை சூடி உள்ளது. இதுவரை வந்த முடிவுகளின் அடிப்படையில் பார்த்தால் தி.மு.க.விற்கு கிடைத்துள்ளது என்பது இமாலய வெற்றியாகும்.
தி.மு.க கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான ஸ்டாலின் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்யவில்லை. காணொலி காட்சி மூலம் மட்டுமே மாவட்ட வாரியாக பிரச்சாரம் செய்தார். அவரது மகனும் தி.மு.க.இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் அனைத்து இடங்களுக்கும் சென்று களமாடினார். எதிர்க்கட்சியை பொறுத்தவரை அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பரப்புரை செய்தனர்.
மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.க. இந்த தேர்தலில் தனித்து நின்றதால் வீறுகொண்டு எழுந்து பிரச்சாரம் செய்தது. அக்கட்சியின் இளம் தலைவரான அண்ணாமலை ஐ.பி.எஸ். தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்கிற ரீதியில் பேசியதோடு ஆளும் தி.மு.க. அரசு மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
'எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரையில் முக்கியமாக குறிப்பிட்டது எட்டு மாத கால தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. அந்த வெறுப்பை இந்த தேர்தலில் வெளிப்படுத்த போகிறார்கள். இந்த ஆட்சிக்கு மக்கள் போடும் மதிப்பெண்ணாக தேர்தல் முடிவு அமையும்' என்றார்.
பதிலுக்கு தி.மு.க. தரப்பில் செய்யப்பட்ட பரப்புரையில் மிக முக்கியமாக மக்களிடம் எடுத்து வைக்கப்பட்டது 'உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி' அதாவது தி.மு.க. ஆட்சி என்பதே அவர்கள் மிக முக்கியமாக எடுத்து வைத்த கோஷங்கள். சுயமரியாதைக்கு வாக்களியுங்கள், சகோதரத்துவத்திற்கு வாக்களியுங்கள், ஜனநாயகத்திற்கு வாக்களியுங்கள், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்பதே. இரண்டு தரப்பினர் அளித்த வாக்குறுதிகளையும் மக்கள் சீர்தூக்கிப் பார்த்து வாக்களித்திருக்கிறார்கள். முடிவில் தி.மு.க.வின் பரப்புரையே மக்கள் மனதில் நிலையான இடத்தை பெற்று இருக்கிறது என்பதையே இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது.
எதிர்க்கட்சியினர் மதிப்பெண் போடுங்கள் என்றார்கள். மக்கள் தி.மு.க. ஆட்சிக்கு ஆதரவான மதிப்பெண்ணை கொடுத்திருக்கிறார்கள். அதனால்தான் தி.மு.க. கிட்டத்தட்ட நூற்றுக்கு நூறு சதவீத வெற்றியை பெற்றிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அந்த வகையில் தமிழகத்தின் 21 மாநகராட்சிகளிலும் 138 நகராட்சிகளிலும் மற்றுமுள்ள பேரூராட்சிகளிலும் தி.மு.க. ஆட்சியே விரைவில் வரப்போகிறது. மாநிலத்திலும் தி.மு.க. ஆட்சி, உள்ளாட்சியிலும் தி.மு.க. ஆட்சி மலர்ந்தால் தான் நமது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சரியாக இருக்கும் என மக்கள் நினைத்திருக்கலாம். அதன் வெளிப்பாடே இந்த தேர்தல் முடிவு.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாக இந்த தீர்ப்பை தமிழக அரசு ஏற்று தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்க இந்த அரசு உறுதி ஏற்பதற்கான முடிவாக இந்த தேர்தல் முடிவு இருக்கட்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu