உள்ளாட்சி உள்குத்து : திமுகவினருக்கு 'செக்' வைக்கும் உட்கட்சி விஐபிக்கள் -அதிமுகவிற்கு சாதகமா?
தேனி மாவட்டத்தில் 10 ஆண்டுகளாக எதிர்கட்சியாக இருந்த போது, ஓரணியில் நின்று போராடி வந்த தி.மு.க.,வினர், தற்போது ஆளும்கட்சியான பின்னர் பல கோஷ்டிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் எதிர்த்து களம் காண்கின்றனர்.
தேனி மாவட்டம் அதிமுக.,வின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்து வந்தது. மாநிலத்தில் எந்த மாவட்டத்தில் வென்றாலும், தேனி மாவட்டத்தை தொடவே முடியாது என்ற நிலையில்அந்த மாவட்டம் அ.தி.மு.க., கட்டுக்குள் இருந்தது.
கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க., ஆளும் கட்சியாக இருந்த போது, ஓ.பி.எஸ்., கவனம் முழுக்க ஆட்சி நிர்வாகத்தின் மீது மாறிப்போனது. உள்ளூர் அரசியலில் கவனம் செலுத்தவில்லை.
இதனை சாதகமாக பயன்படுத்திய தி.மு.க., அ.தி.மு.க., ஆளும் கட்சியாக இருந்த போதே, நடந்த உள்ளாட்சி தேர்தலில் கோட்டையை இடித்து விட்டனர். அ.தி.மு.க., வசம் இருந்த பெரியகுளம், ஆண்டிபட்டி தொகுதிகளை கைப்பற்றினர். அதாவது அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த போது நடந்த இடைத்தேர்தலிலேயே தி.மு.க., அவ்வளவு பெரிய வெற்றியை பெற்றனர்.
அடுத்த நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம் சட்டசபை தொகுதிகளை கைபற்றினர். போடியில் ஓ.பி.எஸ்., போராடியே வென்றார். அவர் வென்றாலும், போடி அ.தி.மு.க.,வின் கையை விட்டு போன நிலையில் தான் இதுவரை இருந்து வருகிறது. தி.மு.க.,வினர் மத்தியில் இருந்த ஒருங்கிணைந்த போராட்ட குணம் மட்டுமே அ.தி.மு.க.,வின் கோட்டையை தகர்த்ததற்கு முழு காரணமாக அமைந்தது.
அப்படிப்பட்ட பெருமை கொண்ட தி.மு.க., இப்போது பல குழுக்களாக சிதறி கிடக்கிறது. தேனியிலேயே நகராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க.,வினர் கடும் போட்டியை உருவாக்கி வருகின்றனர். இவர்கள் தலைவர் பதவியை தங்களது எதிரி (அவரும் தி.மு.க., நிர்வாகி தான்) கைப்பற்றக்கூடாது என்பதற்காக கவுன்சிலர் தேர்தலில் கூட வீழ்த்தக்கூடும் என உளவுப்பிரிவே தி.மு.க., மேலிடத்தை எச்சரித்துள்ளது. தேனியில் தி.மு.க.,வின் முன்னாள் நகர செயலாளர் ஒருவர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளார். இன்னொரு நிர்வாகி தனது உறவுக்கார பெண்ணை வார்டு கவுன்சிலர் தேர்தலில் களம் இறக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். தேனியில் மட்டுமல்ல இந்த நிலை. மாவட்டம் முழுவதுமே உள்ளது. இந்த பலகீனத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த ஓ.பி.எஸ்., புது வியூகம் வகுத்து வருகிறார். ஓ.பி.எஸ்., அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி.,யும் மீண்டும் தேனி மாவட்டத்தை கைப்பற்றி அ.தி.மு.க.,வின் கோட்டை என நிரூபிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போதய தி.மு.க.,வின் கோஷ்டி பூசல் அ.தி.மு.க.,விற்கு சாதகமாக மாறிவிடும் என்ற உளவுப்பிரிவின் எச்சரிக்கையால் தி.மு.க., மேலிடம் தனது கண்காணிப்புக்குழுவை மாவட்டத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu