திண்டுக்கல் அருகே நடுகல் கண்டுபிடிப்பு
திண்டுக்கல் அருகே, 12-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது.
திண்டுக்கல் அருகே, 12-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது. திண்டுக்கல்லை அடுத்த தாமரைப்பாடி அருகே பழமையான 4 அடி உயரம், 6 அடி நீளம் கொண்ட நடுகல் இருப்பதை ஆய்வு குழுவினர் கண்டுபிடித்தனர்.
தாமரைப்பாடி அருகே, கண்டுபிடிக்கப்பட்ட நடுகல்லில் 2 வீரர்களுடன் ஒரு பெண் இருக்கிறார்.அடுத்ததாக இரு நாகங்கள் இணைந்த நிலையில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் நாகர் என்னும் மக்கள் வாழ்ந்ததை குறிக்கிறது.இந்த நடுகல் 12-ம் நூற்றாண்டை சேர்ந்தது ஆகும். நடுகல்லின் அமைப்பு, வீரர்களின் தோற்றம் ஆகியவை அதை உறுதி செய்கிறது.இந்த நடுகல்லை இன்றும் மக்கள் வழிபடுகின்றனர்.
நடுகற்கள் என்றால் என்ன?
மனிதன் காடுகளில் வாழ்ந்த ஆதி காலம் தொட்டே இயற்கையை வணங்கியும், மரணத்தைக் கண்டு பயந்தும் வாழ்ந்துள்ளான். அப்படி இறந்து போகும் மனிதன் எங்கு செல்வான் என்ற கேள்வி அவன் மனதைக் குடைந்து கொண்டே இருந்தது. இறந்தவர்களுக்காக ஈமச்சின்னங்களை ஏற்படுத்தவும் பழகிக்கொண்டான். அவற்றில் ஒன்று கல்திட்டை. இவை ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. இந்தக் கல்திட்டைக்குள் வேட்டைக் காட்சிகளும், மனிதன் மற்றும் விலங்குகளின் உருவங்களும் பல இடங்களில் காணப்படுகின்றன. இந்தப் பாறை ஓவியங்களே நடுகற்களின் முன்னோடியாக இருக்கலாம்.
சங்க இலக்கியங்களில் நடுகற்களைப் பற்றிக் குறிப்பு இருந்தாலும் அவை இப்போது நம்மிடையே இல்லை. கால வெள்ளத்தில் அழிந்துபட்டன. விலங்குகளுடன் போரிட்டு இறந்த வீரனுக்காக வரையப்பட்ட ஓவியங்கள் தொன்மை வாய்ந்தவை. பெருங்கற்காலம் தொடங்கி இறந்தவர்களுக்கு உலகமெங்கும் நினைவுக்கற்கள் எடுக்கப்பட்டாலும் போரில் இறந்தவர்களுக்கு வீரக்கல் எனப்படும் நடுகல் எடுப்பது சிறப்பான ஒன்றாக இருந்துள்ளது. விலங்குகளுக்கும் கோழிக்கும்கூட நடுகல் எடுக்கும் பழக்கம் இருந்துள்ளது. ஆநிரைப்போரில் இறந்தவர்களுக்கு பல்லவர், பாணர், கங்கர்களின் காலத்தில் நிறைய நடுகல் எடுக்கப்பட்டுள்ளது.
நினைவுக்கல்..
ஆதிமனிதன் தன் கூட்டத்தில் இறந்தவர்களைப் புதைத்த இடத்தை அடையாளப்படுத்த, அந்த இடத்தில் கற்களை நட்டுவைத்தான். அதுவே உலகின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு முறைகளில் குத்துக்கற்கள், கற்பதுகை, கல்வட்டம், கற்குவை, கற்திட்டை எனப் பல வகைகளில் மாற்றமடைந்து வந்தது. போரில், மற்றும் விலங்குகளை வேட்டையாடி இறந்தவர்களுக்கு நடுகல் எடுக்கப்பட்டது. தற்போதும் கூட கிராமங்களில் உள்ள அய்யனார், செல்லியம்மன், கருப்பையா கோயில்களில் இறந்தவர்களுக்கான நினைவுக் கற்களைக் காணலாம். பிரசவத்தில் இறந்த பெண்கள் கைக்குழந்தையுடன் காட்டப்பட்டுள்ளனர். இன்றும் கூட இந்தப் பழக்கம் வழக்கத்தில் உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu