ஓட்டலில் கஞ்சா பறிமுதல் உள்ளிட்ட திண்டுக்கல் மாவட்ட கிரைம் செய்திகள்

ஓட்டலில் கஞ்சா பறிமுதல் உள்ளிட்ட திண்டுக்கல் மாவட்ட கிரைம் செய்திகள்
X

தனியார் விடுதியில் ,இருந்த 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

வேடசந்தூரில் தனியார் ஓட்டலில் 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கி இருப்பவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக வேடசந்தூர் டி.எஸ்.பி.துர்கா தேவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் பாண்டியன் மற்றும் டிஎஸ்.பி தனிப்படையினர் டால்பின் லாட்ஜில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஒரு அறையில் தங்கியிருந்த 6 பேர் 11 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்ததையடுத்து, அவர்களை வேடசந்தூர் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 4 பேர் மதுரையை சேர்ந்தவர்கள் மற்றும் இருவர் எரியோடு பகுதியை சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில், ரெயில்கள் வேகமாக செல்வதற்கு வசதியாக 2 தண்டவாளங்கள் மாற்றி அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.

திண்டுக்கல் ரயில் நிலையத்தில், சரக்கு ரெயில்களை வேகமாக இயக்கும் வகையில் 3, 4-வது நடைமேடைகளில் இருக்கும் தண்டவாளங்களை புதிதாக மாற்றி அமைக்கும் பணி கடந்த மாதம் தொடங்கியது. இதையொட்டி, அவற்றில் இருந்த கான்கிரீட் தளம் அகற்றப்பட்டு, ஜல்லிகற்களை பரப்பி அவற்றின் மீது புதிதாக தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த 2 தண்டவாளங்களும் பயன்பாட்டுக்கு வந்தது. இதில், வந்தே பாரத் உள்ளிட்ட ரெயில்களை இயக்கி சோதனை செய்யப்பட்டன. அப்போது, லேசான அதிர்வு ஏற்படுவது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, பேக்கிங் எந்திரம் மூலம் தண்டவாளங்களை சரிசெய்யும் பணி நடந்தது.

இதேபோல் 2 தண்டவாளங்களின் நடுவே சுமார் 50 மீட்டர் நீள கால்வாய் கட்டும் பணி பாக்கி இருந்தது. அந்த பணி முடியும் வரை இரவில் மட்டுமே ரெயில்கள் இயக்கப்படும். கால்வாய் பணி முடிந்ததும் பகலிலும் அந்த தண்டவாளங்களில் ரெயில் இயக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

கொடைக்கானல் ‘டால்பின் நோஸ்’ வனப்பகுதியில் 100 அடி பள்ளத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் தவறி விழுந்தார். மரக்கிளையை பிடித்து அவர் உயிர் தப்பினார்.

ஈரோடு மாவட்டம், சித்தோடு பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் 20 பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர்.


மாணவர்களில், ஒருவரான பிரதாப் (வயது 19) என்பவர் 'டால்பின் நோஸ்' பாறையின் நுனி பகுதியில் நின்று கொண்டிருந்தார். திடீரென அவர் யாரும் எதிர்பாராத வகையில் பாறையில் இருந்து தவறி கீழே விழுந்தார். பள்ளத்தாக்கில் உருண்டு கொண்டே சென்ற அவர், அங்கிருந்த ஒரு மரக்கிளை இடையே மாட்டிக்கொண்டார். மரக்கிளையை பிடித்தபடி காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அவர் அபயகுரல் எழுப்பினார்.

இதனைக்கண்ட,சக மாணவர்கள் வனத்துறை, போலீசார், தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தாலும் அவர்கள் வருவதற்கு காலதாமதம் ஏற்படும் என்று கருதினர். இதனால் தாங்களே பள்ளத்தில் தங்களது உயிரை பொருட்படுத்தாமல் பள்ளத்தாக்கில் கீழே இறங்கி சுமார் 100 அடி பள்ளத்தில் இருந்த ஒரு மரத்தில் சிக்கி இருந்த பிரதாப்பை பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர். தவறி விழுந்ததால் பிரதாப்பின் உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. பிரதாப் சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil