கொடைக்கானலில் கூடாரம் அமைத்து தங்க சுற்றுலா பயணிகளுக்கு தடை

கொடைக்கானலில் கூடாரம் அமைத்து தங்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
X
கொடைக்கானலில் அனுமதியின்றி அமைக்கப்படும் கூடாரங்களில் தங்குவதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா கொடைக்கானலின் அழகை ரசிக்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இதனிடையே வருவாய்த்துறை, வனத்துறைக்கு சொந்தமான இடங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் 'டென்ட்' எனப்படும் கூடாரங்கள் அமைத்தும், ரயில் கன்டெய்னர்கள் அறைகளாக மாற்றப்பட்டும் சுற்றுலா பயணிகள் தங்க வைக்கப்படுகின்றனர். இதில் தங்கும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்து கொடுக்காமல் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் இதில் தங்கும் சுற்றுலா பயணிகளுக்கு வன விலங்குகள் மூலமாகவும் பாதிப்பு ஏற்படுகிறது. அத்துடன் வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்படுகிறது.

இதை தடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் கொடைக்கானல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு ஆர்.டி.ஓ.முருகேசன் தலைமை தாங்கினார். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், தாசில்தார் முத்துராமன், உதவி சுற்றுலா அலுவலர் ஆனந்தன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் ஆர்.டி.ஓ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொடைக்கானலில் எந்தவிதமான அனுமதியும் இன்றி அமைக்கப்படும் கூடாரங்களில் தங்குவதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடாரம் அமைப்பவர்கள், இதற்காக இடம் கொடுப்பவர்கள் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கூடாரத்தில் தங்குவது குறித்து சமூக வலைத்தளங்களில் பார்வையிடும் சுற்றுலா பயணிகள், அதில் முன்பதிவு செய்து கொடைக்கானலுக்கு வந்து தங்குகிறார்கள்.

ஆனால் அதில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததை கண்டு பாதிக்கப்படுகின்றனர்.இதை கருத்தில் கொண்டு போலீஸ் துறை மூலம் இதுவரை 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 100-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த பணி தொடர்ந்து நடைபெறும். அதேபோல் வீடுகளை தங்கும் விடுதிகளாக மாற்றி வாடகைக்கு விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த வீடுகளுக்கு 'சீல்' வைக்கப்படும்.

கொடைக்கானல் நகர் மற்றும் மலைப்பகுதியில் டிரோன் கேமரா மூலம் படம் எடுப்பதற்கு அனுமதி கிடையாது. இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!