பழனி- தாராபுரம் சாலை விரிவாக்கப் பணிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைப்பு..!

பழனி- தாராபுரம் சாலை விரிவாக்கப் பணிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைப்பு..!
X

 பழனி - தாராபுரம் சாலை விரிவாக்கப்பணிகளை அமைச்சர் எ.வ.வேலு கொடியசைத்து தொடக்கிவைத்தார்.

அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் சக்கரபாணி ஆகியோர் பழனி – தாராபுரம் இருவழிச் சாலையினை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் திட்டப்பணிகளை இன்று(15.12.2023) துவக்கி வைத்தனர்.

திண்டுக்கல்:

பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, முன்னிலையில் பழனி – தாராபுரம் இருவழிச்சாலையினை அகலப்படுத்தி நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் திட்டப்பணிகளை துவக்கி வைத்து தமிழகத்தில் ரூ.4,324.00 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, முன்னிலையில் அரசு கூடுதல் முதன்மைச் செயலாளர் (நெடுஞ்சாலைத்துறை) பிரதீப் யாதவ், மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, தலைமையில் பழனி – தாராபுரம் இருவழிச் சாலையினை அகலப்படுத்தி ரூ.97.30 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் திட்டப்பணிகளை இன்று(15.12.2023) துவக்கி வைத்தார்.

விழாவில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்எ.வ.வேலு, பேசியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர், தமிழகத்தில் சாலைகளின் தரத்தினை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி, செயல்படுத்தி வருகிறார்கள். அதற்காக முதல்வர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் 2200 கி.மீட்டர் நீளம் சாலை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, 2021-2022-ஆம் ஆண்டில் 255 கி.மீட்டர் நீளம் சாலை ரூ.2124 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கிராமப்பகுதிகளில் 1721 தரைப்பாலங்கள் உள்ளன. இந்த தரைப்பாலங்களை மேம்படுத்த ரூ.2200 கோடி நிதியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், ஒதுக்கி தந்தார். அதன்படி 2021-22-ஆம் ஆண்டில் ரூ.800.00 கோடி மதிப்பீட்டில் 66 தரைப்பாலங்களும், 2022-23-ஆம் ஆண்டில் ரூ.110.00 கோடி மதிப்பீட்டில் 66 தரைப்பாலங்களும், 2023-24-ஆம் ஆண்டில் ரூ.800 கோடி மதிப்பீட்டில் 274 தரைப்பாலங்களும் மேம்பாலங்களாக மாற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து பல்வேறு இடங்களில் தரைப்பாலங்கள் மேம்பாலங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டும் இதேபோல், பணிகள் மேற்கொள்ளும்பட்சத்தில் தமிழகத்தில் தரைப்பாலங்களே இல்லாத நிலை உருவாகும்.

திண்டுக்கல் மாவட்டத்தில், 2021-22-ஆம் ஆண்டில் 212 கி.மீட்டர் நீளம் சாலை ரூ.331 கோடி மதிப்பீட்டிலும், 2022-23-ஆம் ஆண்டில் 301 கி.மீட்டர் நீளம் சாலை ரூ.391 கோடி மதிப்பீட்டிலும், 2023-24-ஆம் ஆண்டில் 164 கி.மீட்டர் நீளம் சாலை ரூ.457 கோடி மதிப்பீட்டிலும் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பழனி (நெடுஞ்சாலைத்துறை- கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டத்தில் பழனி - தாராபுரம் சாலை 13.40 கி.மீட்டர் நீளத்திற்கு, முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.106.00 கோடி நிதி நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு, நிதி ஒதுக்கீடு பெற்று ரூ.97.30 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தி நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் திட்டப்பணிகள் இன்று (15.12.2023) துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இப்பணியில் ரூ.8.61 கோடி மதிப்பீட்டில் 23 சிறு பாலங்கள் அகலப்படுத்தப்பட்டு மேம்பாடு செய்யும் பணிகளும், ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் 550 மீட்டர் நீளத்தில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இச்சாலையானது ரூ.47.60 கோடி மதிப்பீட்டில் மையத்தடுப்பானுடன் இருபுறமும் 7.50 மீட்டர் அகலத்திற்கு ஓடுதளம் அமைக்கப்பட உள்ளது.

இப்பணி செயல்படுத்தப்படும்பட்சத்தில் பழனி-தாராபுரம் சாலையில் புளியம்பட்டி, தும்மலப்பட்டி, தொப்பம்பட்டி மற்றும் வேலம்பட்டி ஆகிய ஊர் மக்களின் கல்வி, விவசாயம் மற்றும் மருத்துவ உதவிகள் உள்ளிட்ட வாழ்வியல் மேம்பாடு அடைய அதிக வாய்ப்புள்ளது. மேலும், இச்சாலை திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோயமுத்தூர் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலையாகும். பின்னலாடை உற்பத்தியில் சிறந்து விளங்கும் தொழில் நகரான திருப்பூரை இணைக்கும் விதத்தில் இந்தச்சாலை அமைந்துள்ளது.

மேலும், இத்திட்டப்பணியில் சாலையின் வலதுபுறம் பழனி ஆண்டவர் கோயிலுக்கு வரும் தைப்பூச திருவிழாவிற்கு வரும் பாதயாத்திரை பக்தர்கள் மற்றும் பங்குனி உத்திர திருவிழாவிற்கு கொடுமுடியிலிருந்து தீர்த்த காவடி எடுத்து வரும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிக்காக 1.50 மீட்டர் அகலத்தில் நடைபாதையானது ரூ.6.87 கோடி மதிப்பீட்டில் பேவர் பிளாக் நடைபாதை (Paver Block Foot Path) வசதியும் அமைக்கப்பட உள்ளது.

மேலும், புளியம்பட்டி மற்றும் தொப்பம்பட்டி ஆகிய சாலை சந்திப்புகளில் முதலமைச்சரின் ஆணையின் படி விபத்துக்களை முற்றிலுமாக குறைக்கும் வகையில் சாலை சந்திப்புகள் ரூ.3.68 கோடி மதிப்பீட்டில் சீர் செய்யப்பட உள்ளது. இதில் ,

இச்சாலையில் 15 இடங்களில் சிறு சந்திப்புகளும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக மேம்படுத்தப்பட உள்ளது. மேலும், இச்சாலையில் 6 இடங்களில் பேருந்து நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும், புளியம்பட்டி மற்றும் தொப்பம்பட்டி கிராமங்களின் குடியிருப்பு பகுதிகளில் 1200 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் வசதி ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது.

பழனி (நெ) கட்டுமானம் (ம) பராமரிப்பு கோட்டத்தில், மாநில நெடுஞ்சாலைகள் 256.865 கி.மீட்டர், மாவட்ட முக்கியச் சாலைகள் 357.718 கி.மீட்டர், மாவட்ட இதரச் சாலைகள் 785.740 கி.மீட்டர், கரும்பு அபிவிருத்தி சாலைகள் 18.740 கி.மீட்டர் என மொத்தம் 1,419.063 கி.மீட்டர் நீளம் சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இக்கோட்டத்தில், கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு சாலைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2021-22-ஆம் ஆண்டில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.87.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, 7.670 கி.மீட்டர் நீளமுள்ள ஒட்டன்சத்திரம் நகரப் பகுதி சாலை இரு வழிச் சாலையிலிருந்து பாவு தளத்துடன் கூடிய நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், தடுப்புச் சுவர் கட்டுதல், வடிகால் கட்டுதல் நடைபாதை அமைத்தல் ஆகியவற்றில் 90 சதவீதம் பணிகள் முடிவுற்றுள்ளது. மேலும், ஒருங்கிணைந்த சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ. 97.44 கோடி மதிப்பீட்டில் 96.790 கி.மீட்டர் நீளமுள்ள சாலைகள் அகலப்படுத்தி முடிக்கப்பட்டுள்ளது.

2022-23-ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.175.79 கோடி மதிப்பீட்டில் 163.87 கி.மீட்டர் நீளமுள்ள சாலைகள் அகலப்படுத்தி மேம்பாடு செய்து முடிக்கப்பட்டுள்ளது. 2023-24-ஆம் ஆண்டில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம், ரூ.106.00 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பழனி - தாராபுரம் சாலை 13.400 கி.மீட்டர் நீளம் இரு வழிச் சாலையிலிருந்து நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்தல் பணி தொடங்கப்

பட்டுள்ளது. மேலும், ஒருங்கிணைந்த சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.262.02 கோடி மதிப்பீட்டில் 235.435 கி.மீட்டர் நீளமுள்ள சாலைகள் அகலப்படுத்தி மேம்பாடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில், வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் ச.காந்திராஜன், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சத்தியபுவனா ராஜேந்திரன், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மு.அய்யம்மாள், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் கா.பொன்ராஜ், ஒட்டன்சத்திரம் நகராட்சித் தலைவர் க.திருமலைச்சாமி, பழனி வருவாய் கோட்டாட்சியர் சௌ.சரவணன், தலைமைப் பொறியாளர்(கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) இரா.சந்திரசேகர், மதுரை கண்காணிப்புப் பொறியாளர்(கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) மாரிமுத்து, கோட்டப்பொறியாளர் குமணன், உதவிக் கோட்டப்பொறியாளர் பாபுராமன், உதவிப்பொறியாளர் ஜெயபாலன், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil