பழனியருகே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சின்னகலையமுத்துர் ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில் விக்டோரியா(41). என்பவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தியதில் விக்டோரியாவிற்கு திருமணமாகி அய்யனார் என்ற கணவரும், திருமண வயதில் இரண்டு மகன்களும் உள்ள நிலையில், விக்டோரியா தனது கணவரையும் குழந்தைகளையும் பிரிந்து பலஆண்டுகளாக தனியே வசித்து வருவதும் தெரியவந்தது.
மேலும் விக்டோரியா எழுதிவைத்த டைரியும் போலீசாரிடம் சிக்கியது. அதில் தனது சாவுக்கு யாருக்கும் காரணமில்லை என்றும், பத்மநாபனை சங்கர் கொலை செய்ததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்வதாக எழுதியிருந்தது.
இதனையடுத்து அப்பகுதியில் சோதனை நடத்தியதில் விக்டோரியா வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் பாப்பம்பட்டியை சேர்ந்த பத்மநாபன்(31) என்பவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை செய்தார். போலீசாரின் தொடர் விசாரணையில் குடும்பத்தை விட்டு பிரிந்து வாழும் விக்டோரியாவிற்கும், பாப்பம்பட்டியை சேர்ந்த பத்மநாபனுக்கும் இடையே மடத்துக்குளம் அருகே காகித ஆலையில் வேலைக்கு சென்றபோது பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது தெரியவந்தது.
மேலும் விக்டோரியாவிற்கு, அவரது வீட்டருகே வசிக்கும் சங்கர்(32) என்பவருடனும் பழக்கம் இருந்து வந்துள்ளது. விக்டோரியா மற்றும் பத்மநாபன் ஆகிய இருவரும் தனிமையில் இருப்பதை சங்கர் பார்த்து ஆவேசத்தில் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலிசார் தலைமறைவான சங்கரை தேடிவந்தனர்.
குற்றவாளி சங்கர் பழனி சார்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அப்போது பத்மநாபனை மட்டுமே கொலை செய்ததாக தெரிவித்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் குற்றவாளி சங்கரை காவலில் எடுத்து விசாரணை செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu