திண்டுக்கல் அருகே தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
திண்டுக்கல் அருகே அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றியம், பொன்னிமாந்துரை ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்:
தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் தோறும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய தினம் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், பொன்னிமாந்துரை ஊராட்சி பகுதியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.
முக ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில், தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களான ‘மக்களைத் தேடி மருத்துவ திட்டம்’, கொரோனா தொற்று காலத்தில் குழந்தைகளின் கல்வி கற்றல் இடைவெளி, இழப்புகளைக் குறைத்திடும் வகையில் ‘இல்லம் தேடிக் கல்வித்திட்டம்’, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ‘மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள்’, ஏழை எளியோர் வாழும் இடத்திலேயே சிறப்பு மருத்துவச் சேவை அளிக்கும் ‘கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்’, உயர்த்தப்பட்ட மகப்பேறு நிதியுதவி திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கான பராமரிப்பு நிதியுதவி திட்டம், சுயஉதவிக்குழுக்களின் கூட்டுறவுத்துறை கடன் தள்ளுபடி மற்றும் 5 பவுன் வரை தங்க நகைக்கடன் தள்ளுபடி திட்டம் ஆகியவை குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் படக்காட்சி காண்பிக்கப்பட்டது.
மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில்,ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப்பணிகள் உள்ளிட்டவைகள் தொடர்பாக புகைப்படங்கள் இடம் பெற்று, பொதுமக்கள் பார்த்து எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் இக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu