‘விண்ணப்பித்த 15 நாளில் புதிய ரேஷன் கார்டு’- அமைச்சர் சக்கரபாணி தகவல்
திண்டுக்கல் அருகே, திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர் ,அமைச்சர் சக்கரபாணி
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி முன்னிலையில், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், ரூ.6.55 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.12.67 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அதன் பயன்கள் கடைக்கோடி கிராமங்களில் வசிக்கும் பொது மக்களுக்கும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்.
பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் வகையில், செயல்படுத்தப்படும் விடியல் பயணத்திட்டத்தில் இதுவரை 440 கோடி பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் 1.15 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில், தகுதியுள்ளவர்கள் விடுபட்டிருந்தால், அவர்களுக்கும் இத்திட்டத்தின் பயன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில், ரூ.1000 கோடி மதிப்பீட்டில் காவிரி குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு நபருக்கு தினமும் 55 லிட்டர் குடிநீர் வழங்க திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் வரும் 30 ஆண்டுகளில் ஏற்படும் மக்கள்தொகை பெருக்கத்தை கருத்தில்கொண்டு, உருவாக்கப்பட்டுள்ளது.
வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டி வழங்கும் வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 8.00 இலட்சம் வீடுகள் தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் தலாஒரு மாதிரி வீடு கட்டப்படவுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்துார் மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய சட்ட மன்ற தொகுதிகளில் தலா ஒரு வீடு என மொத்தம் 2 வீடுகள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன. வீட்டின் முன்புறம் நிழல்தரும் வகையில் குளிர்அட்டை கூடாரம் அமைக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தொகுப்பு வீடுகள் திட்டத்தில் ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளை பழுதுபார்க்க ரூ.2000.00 கோடி நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டு, 2.50 இலட்சம் வீடுகள்பழுது பார்க்கப்படவுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தினரை கண்டறிந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 5 லட்சம் குடும்பங்களுக்கு தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
ஒட்டன்சத்திரம் பகுதியில், உயர்கல்வித்துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, இந்துசமய அறநிலையத்துறை சார்பில் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மற்றும் விருப்பாட்சியில் ஒரு தொழிற்கல்வி பயிற்சி நிலையம் ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன. கள்ளிமந்தயத்தில், உயர்கல்வித்துறை சார்பில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டடம் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு புதிய கட்டடம் ஒட்டன்சத்திரத்தில் கட்டுவதற்காக ரூ.68.00 கோடி நிதி ஒப்புதல் பெறப்பட்டு முதற்கட்டமாக ரூ.25.00 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படவுள்ளன.
படித்த இளைஞர்களை அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், காளாஞ்சிப்பட்டியில் ரூ.10.15 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர், விவசாயிகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். விவசாயம் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. விவசாயத்திற்காக 2 இலட்சம் இலவச மின் இணைப்பு வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி, இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு, விவசாயிகளின் தேவையை அறிந்து வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலமாக ஒட்டன்சத்திரம் பகுதியில் 1000 மெ.டன் கொள்ளளவு கொண்ட நவீன குளிர்பதன கிடங்கி ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், முருங்கை ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லப்பட்டியில் 17 ஏக்கர் பரப்பளவில் முருங்கை ஏற்றுமதி மண்டலம் அமைக்கப்படவுள்ளது.
குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்தால், தகுதியுள்ளவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 3 ஆண்டுகளில் 15 இலட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, 45,000 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படவுள்ளன. அதில், திண்டுக்கல் மாவட்டத்திற்கு 4045 குடும்ப அட்டைகள் வழங்கப் படவுள்ளன. அதில், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் சுமார் 450 குடும்ப அட்டைகள் வழங்கப்படவுள்ளன.
இன்றையதினம், வலையபட்டி ஊராட்சியில் மாவட்டகனிம வள நிதியிலிருந்து 2 சிமெண்ட் சாலை மற்றும் 2 வண்ணக்கல் பதிக்கும் பணிகள் ரூ.44.00 இலட்சம் மதிப்பீட்டிலும், எல்லப்பட்டி ஊராட்சியில் நமக்குநாமே திட்டத்தில் சமுதாயக்கூடம் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டிலும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் 5 பணிகள் ரூ.44.08 இலட்சம் மதிப்பீட்டிலும், நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தில் 2.27 கோடி மதிப்பீட்டிலும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் மார்க்கப்பட்டி ஊராட்சியில் 5 பணிகள் ரூ.43.27 இலட்சம் மதிப்பீட்டிலும், சின்னக்காம்பட்டி ஊராட்சியில் 6 பணிகள் ரூ.38.34 இலட்சம் மதிப்பீட்டிலும், சிந்தலைப்பட்டி ஊராட்சியில் 5 பணிகள் ரூ.38.21 இலட்சம் மதிப்பீட்டிலும், மண்டவாடி ஊராட்சியில் 4 பணிகள் ரூ.45.08 இலட்சம் மதிப்பீட்டிலும், காப்பிலியபட்டி ஊராட்சியில் 5 பணிகள் ரூ.40.31 இலட்சம் மதிப்பீட்டிலும், தங்கச்சியம்மாபட்டி ஊராட்சியில் 6 பணிகள் ரூ.44.96 இலட்சம் மதிப்பீட்டிலும், தா.புதுக்கோட்டை ஊராட்சியில் 5 பணிகள் 39.11 இலட்சம் மதிப்பீட்டிலும் என, மொத்தம் ரூ.6.55 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும், விருப்பாட்சியில் ரூ.12.67 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக்கட்டடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
முதியோர் உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகைகயை உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு, நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் 33 மாத ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவருக்கு என்றென்றும் ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.திலகவதி, பழனி வருவாய் கோட்டாட்சியர் சௌ.சரவணன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் சசி, வட்ட வழங்கல் அலுவலர் பிரசன்னா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu