செம்பட்டி அருகே சாலை விரிவாக்க பணிக்காக போலீஸ் பாதுகாப்புடன் வீடுகள் இடிப்பு
வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தில் வாக்குவாதம் செய்தவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
செம்பட்டியை எஸ்.புதுக்கோட்டை அருகே 4 வழிச்சாலை பணிகளுக்காக வீடுகளை அகற்ற சென்ற அதிகாரிகளுடன் பாதிக்கப்பட்டவர்களுடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் முக்கிய சாலைகள் எல்லாம் நான்குவழிச்சாலைகளாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலை மற்றும் திண்டுக்கல் தேனி தேசிய நெடுஞ்சாலையும் நான்கு வழிச்சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே எஸ்.புதுக்கோட்டை கிராமத்தில் 4 வழிச்சாலை பணிகளுக்கு இடையூறாக உள்ள, 13 வீடுகளை அகற்ற இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர் முடிவு செய்து, வீடுகளுக்கான இழப்பீடு தொகை கடந்த, 6 மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்டு விட்ட நிலையில், முதல் கட்டமாக எஸ்.புதுக்கோட்டையை சேர்ந்த மகாலட்சுமி (45), ராமமூர்த்தி (35), மாயாண்டி (45), பூபதியம்மாள் ஆகியோரது வீடுகளை இடிக்க முடிவு செய்தனர்.
வீடுகளை இடிப்பதற்கு கால அவகாசம் கேட்டு, வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் மற்றும் அதிகாரிகளுடன் வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் அவரது உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால், சம்பவ இடத்திற்கு, ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. முருகேசன், செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு, நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், வீட்டின் உரிமையாளர்களின் கடும் எதிர்ப்பை மீறி, பொக்லைன் எந்திரம் மூலம் வீடுகளை அதிகாரிகள் இடித்து தரைமட்டம் ஆக்கினர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu