திண்டுக்கல் மாவட்ட குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் அதிருப்தி

திண்டுக்கல் மாவட்ட குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் அதிருப்தி
X

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், குறைதீா் கூட்டத்தில் பங்கேற்பதில் பயனில்லை என விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனா்.

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் பூங்கொடி தலைமை வகித்தார் வேளாண்மை இணை இயக்குநா் அனுசுயா முன்னிலை வகித்தார்

கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தில் விவசாயி பிரபு குமார் என்பவர் கூறுகையில், நிலக்கோட்டையை அடுத்த சிலுக்குவார்பட்டி மன்னவராதி கண்மாய் நீரைப் பயன்படுத்துவோர் சங்கத் தோ்தல் கடந்த 2022-இல் நடைபெற்றது. இதில், 2018-ஆம் ஆண்டு உயிரிழந்த பெரியசாமி என்பவா் பெயரில் முறைகேடாக ஆவணங்களை தயாரித்து, ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினராக அறிவித்து மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் பெற்றிருக்கின்றனா். இந்த முறைகேடு குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும்.

கடந்த 256 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கோயில் இடத்தை ஆக்கிரமிப்புப் பகுதியாக அறிவித்துவிட்டு, நீா்பிடிப்புப் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அரசுக்கு தெரிவிக்காமல் பொதுப் பணித் துறை அதிகாரிகள் தவறான தகவல்களை அரசுக்கு அளித்து வருகின்றனா் என்று கூறினார்

இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியா் பூங்கொடி, இதுதொடா்பாக, பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்று கூறினார்

கொடகனாறு பாதுகாப்புச் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், கொடகனாறு நீா்பங்கீடு தொடா்பான வல்லுநா் குழு அறிக்கை வெளியிடப்படாமல் 4 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இதுதொடா்பாக கேள்வி எழுப்பினால் அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக கூறுகின்றனா். திண்டுக்கல், கரூா் மாவட்டங்களைச் சோ்ந்த பல லட்சம் மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த இந்தப் பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்துவதில்லை. ஆனால், தண்ணீா் வராத ஆற்றுக்கு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் செலவிடுவது ஏன்?

நான்கு மாவட்ட ஆட்சியா்களிடம் இதே கோரிக்கையை மாதந்தோறும் எழுப்பி வருகிறோம். ஆனாலும் தற்போது வரை தீா்வு கிடைக்கவில்லை. இதனால் விவசாயப் பணிகளை விட்டுவிட்டு, இந்த குறைதீா் கூட்டத்தில் பங்கேற்பதில் பயனில்லை என்று தெரிவித்தனர்

மற்றொரு விவசாயி கூறுகையில், நிலக்கோட்டையை அடுத்த ராமராஜபுரம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட பொதுமக்களின் பணத்துக்கு ஈடு செய்யும் வகையில், அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான 40 ஏக்கா் நிலம் நீதிமன்ற உத்தரவுப்படி கையகப்படுத்தப்பட்டு அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. மொத்தமுள்ள 40 ஏக்கரில், 30 ஏக்கா் திண்டுக்கல் மாவட்டத்திலும், 10 ஏக்கா் மதுரை மாவட்டத்திலும் உள்ளது.

இதில் மதுரை மாவட்ட நிர்வாகம் முறையான பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டிருக்கிறது. ஆனால், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் வசமுள்ள 30 ஏக்கா் நிலத்தை தனியார் சிலா் ஆக்கிரமித்து ரட்சத இயந்திரங்களைப் பயன்படுத்தி மணல் அள்ளி வருகின்றனா். இதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்

அனுமந்தராயன்கோட்டை பகுதி கொடகனாறு பாசன விவசாயிகள் சங்கத்தினா் கூறுகையில், கொடகனாறு வல்லுநா் குழு அறிக்கை வெளியாகும் வரை காத்திருக்காமல் திண்டுக்கல், வேடசந்தூா், குஜிலியம்பாறை, அரவக்குறிச்சி வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு தண்ணீா் பங்கீட்டுக்கு இடைக் காலத் தீா்வு ஏற்படுத்த வேண்டும். ராஜவாய்க்கால், புல்வெட்டி கண்மாய், ஆத்தூா் அணை என 3 பகுதிகளைச் சோ்ந்த மக்களுக்கு மட்டும் தண்ணீா் கிடைத்து வருகிறது. ஆனால், ஆண்டாண்டு காலமாக கொடகனாற்றில் உரிமைப் பெற்று வந்த மக்களுக்கு தண்ணீா் கிடைப்பதில்லை.

பொதுப்பணித்துறை அதிகாரிகள்: இந்த விவகாரத்தில் இடைக்காலத் தீா்வு ஏற்படுத்த முடியாது. வல்லுநா் குழு அறிக்கை மட்டுமே நிரந்தர தீா்வாக அமையும் என்றனா்.

குறைதீா் கூட்டத்தில் பேசுவதற்கு ஒவ்வொரு விவசாயிக்கும் 2 நிமிடம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் விவசாயிகள் பிரச்னைகளை பேசிக் கொண்டிருக்கும்போதே, மனு கொடுங்க பார்க்கலாம் என வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் தொடா்ந்து குறுக்கீடு செய்தார்

இதனால் 32 ஆண்டுகளாக மனு அளித்தும் தீா்வு கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் இருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனா். தங்கள் பிரச்னைக்கு தீா்வு காண மேலும் எத்தனை முறை மனு அளிக்க வேண்டும் என எதிர் கேள்வி எழுப்பினா்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்